சீகாழி – சம்பந்தர் தேவாரம் (42):

<– சீகாழி

(1)
சந்தமார் முலையாள் தன் கூறனார்
வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
கந்தமார் பொழில் சூழ்தரு காழியுள்
எந்தையார்அடி என் மனத்துள்ளவே
(2)
மான்இடம் உடையார், வளர் செஞ்சடைத்
தேனிடம் கொளும் கொன்றையந்தாரினார்
கானிடம் கொளும் தண்வயல் காழியார்
ஊனிடம் கொண்டென் உச்சியில் நிற்பரே
(3)
மைகொள் கண்டத்தர், வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளரவாட்டும் படிறனார்
கைகொள் மான் மறியார், கடற்காழியுள்
ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே
(4)
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார்சடை வைத்தவர் காழியுள்
பொற்றொடியோடு இருந்தவர் பொற்கழல்
உற்றபோதுடன் ஏத்தி உணருமே
(5)
நலியும் குற்றமும், நம்முடல் நோய்வினை
மெலியுமாறது வேண்டுதிரேல், வெய்ய
கலி கடிந்த கையார் கடற்காழியுள்
அலைகொள் செஞ்சடையார் அடி போற்றுமே
(6)
பெண்ணொர் கூறினர், பேயுடன் ஆடுவர்
பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர்
கண்ணும் மூன்றுடையார், கடற்காழியுள்
அண்ணலாய அடிகள் சரிதையே
(7)
பற்று மானும் மழுவும் அழகுற
முற்றும்ஊர் திரிந்து பலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுள்
பெற்றம் ஏறதுகந்தார் பெருமையே
(8)
எடுத்த வல்லரக்கன் முடி தோளிற
அடர்த்துகந்து அருள் செய்தவர், காழியுள்
கொடித் தயங்கு நற்கோயிலுள் இன்புற
இடத்து மாதொடு தாமும் இருப்பரே
(9)
காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலும் நான்முகன் தானும் வனப்புற
ஓலமிட்டு முன்தேடி உணர்கிலாச்
சீலம் கொண்டவன் ஊர் திகழ்காழியே
(10)
உருவ நீத்தவர் தாமும், உறுதுவர்
தருவல் ஆடையினாரும் தகவிலர்
கருமம் வேண்டுதிரேல் கடற்காழியுள்
ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்மினே
(11)
கானல் வந்துலவும் கடற்காழியுள்
ஈனமில்லி இணையடி ஏத்திடும்
ஞானசம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மானமாக்கும் மகிழ்ந்துரை செய்யவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page