(1)
நலங்கொள் முத்துமணியும் அணியும் திரளோதம்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுஒன்றுடையாய் விடையா எனஏத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க்கடையா அருநோயே
(2)
ஊரார்உருவரிச் சங்கம் வங்கம் கொடுவந்து
காரார் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக்காழி
நீரார் சடையாய், நெற்றிக் கண்ணா என்றென்று
பேராயிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே
(3)
வடிகொள் பொழிலின் மழலை வரிவண்டிசை செய்யக்
கடிகொள் போதில் தென்றல் அணையும் கலிக்காழி
முடிகொள் சடையாய், முதல்வா என்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க்கில்லை அல்லல் அவலமே
(4)
மனைக்கேயேற வளஞ்செய் பவளம் வளர்முத்தம்
கனைக்கும் கடலுள் ஓதமேறும் கலிக்காழிப்
பனைக்கைப் பகட்டீருரியாய், பெரியாய் எனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே
(5)
பரிதி இயங்கும் பாரில் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புகே கலிக்காழிச்
சுருதி மறை நான்கான செம்மை தருவானைக்
கருதி எழுமின் வழுவா வண்ணம் துயர்போமே
(6)
மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண்டிசைசெய் கலிக்காழிப்
பந்த நீங்க அருளும் பரனே எனஏத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்காதிருப்பாரே
(7)
புயலார் பூமி நாமம்ஓதிப் புகழ் மல்கக்
கயலார் கண்ணார் பண்ணாரொலி செய் கலிக்காழிப்
பயில்வான் தன்னைப் பத்தியாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்றம் முடுகாதே
(8)
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்
கரக்ககில்லாதருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் தன்னையேத்திப் பணிவார்மேல்
பெருக்கும் இன்பம், துன்பமான பிணிபோமே
(9)
மாணாய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத்தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க்கில்லைக் குற்றமே
(10)
அஞ்சியல்லல் மொழிந்து திரிவார் அமணாதர்
கஞ்சி காலை உண்பார்க்கரியான், கலிக்காழித்
தஞ்சமாய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்சலில்லா நல்ல உலகம் பெறுவாரே
(11)
ஊழியாய பாரிலோங்கும் உயர்செல்வக்
காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்
தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...