சீகாழி – சம்பந்தர் தேவாரம் (37):

<– சீகாழி

(1)
பண்ணினேர் மொழி மங்கைமார் பலர் பாடியாடிய ஓசை நாள்தொறும்
கண்ணினேர் அயலே பொலியும் கடற்காழிப்
பெண்ணினேர் ஒரு பங்குடைப் பெருமானை எம்பெருமான் என்றென்றுன்னும்
அண்ணலார் அடியார் அருளாலும் குறைவிலரே
(2)
மொண்டலம்பிய வார் திரைக்கடல் மோதி மீதெறி சங்க வங்கமும்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்டலம்பிய கொன்றையார் அடி வாழ்த்தியேத்திய மாந்தர் தம்வினை
விண்டலங்கெளிதாம் அதுநல் விதியாமே
(3)
நாடெலாம் ஒளியெய்த நல்லவர் நன்றும் ஏத்திவணங்கு வார்பொழில்
காடெலாமலர் தேன்துளிக்கும் கடற்காழித்
தோடுலாவிய காதுளாய், சுரிசங்க வெண்குழையாய் என்றென்று உன்னும்
வேடங்கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே
(4)
மையினார் பொழில் சூழ நீழலில் வாசமார் மதுமல்க நாள்தொறும்
கையினார் மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐயனே அரனே என்றாதரித்து ஓதி, நீதியுளே நினைப்பவர்
உய்யுமாறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே
(5)
மலிகடுந்திரை மேல் நிமிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்திலம் விழக்
கலிகடிந்த கையார் மருவும் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட
மெலியும் தீவினைநோய் அவை மேவுவார் வீடே
(6)
மற்றும் இவ்வுலகத்துளோர்களும் வானுளோர்களும் வந்து வைகலும்
கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணினானை நினைந்திருந்திசை பாடுவார், வினை
செற்ற மாந்தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே
(7)
தானலம்புரை வேதியரொடு தக்க மாதவர் தாம் தொழப்பயில்
கானலின் இரைசேர விம்மும் கலிக்காழி
ஊனுளார் உயிர் வாழ்க்கையாய் உறவாகி நின்றஒருவனே என்றென்று
ஆனலம் கொடுப்பார் அருள்வேந்தர் ஆவாரே
(8)
மைத்த வண்டெழு சோலை ஆலைகள் சாலிசேர் வயலார வைகலும்
கத்து வார்கடல் சென்றுலவும் கலிக்காழி
அத்தனே, அரனே, அரக்கனை அன்றடர்த்துகந்தாய், உனகழல்
பத்தராய்ப் பரவும் பயன்ஈங்கு நல்காயே
(9)
பருமராமொடு தெங்கு பைங்கதலிப் பருங்கனி உண்ண மந்திகள்
கருவரால் உகளும் வயல்சூழ் கலிக்காழித்
திருவின் நாயகனாய மாலொடு, செய்ய மாமலர்ச் செல்வனாகிய
இருவர் காண்பரியான் என ஏத்துதல் இன்பமே
(10)
பிண்டம் உண்டுழல்வார்களும், பிரியாது வண்துகில் ஆடை போர்த்தவர்
கண்டு சேரகிலார் அழகார் கலிக்காழித்
தொண்டை வாய்உமையோடு கூடிய வேடனே, சுடலைப் பொடியணி
அண்டவாணன் என்பார்க்கடையா அல்லல் தானே
(11)
பெயரெனும் இவை பன்னிரண்டினும் உண்டெனப் பெயர் பெற்றவூர், திகழ்
கயலுலாம் வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
நயன் தன் கழலேத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ்உரை
உயருமா மொழிவார் உலகத்துயர்ந்தாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page