சீகாழி – சம்பந்தர் தேவாரம் (3)

<– சீகாழி

(1)
பூவார் கொன்றைப் புரிபுன் சடை ஈசா
காவா என நின்றேத்தும் காழியார்
மேவார் புரமூன்று அட்டார் அவர்போலாம்
பாவார் இன்சொல் பயிலும் பரமரே
(2)
எந்தை என்றங்கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமலர் அவர்போலாம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே
(3)
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்
கானமான் கைக்கொண்ட காழியார்
வானம் ஓங்கு கோயில் அவர்போலாம்
ஆன இன்பம் ஆடும் அடிகளே
(4)
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக்களித்த காழியார்
நாணார் வாளி தொட்டார் அவர்போலாம்
பேணார் புரங்கள் அட்ட பெருமானே
(5)
மாடே ஓதமெறிய வயல் செந்நெல்
காடேறிச் சங்கீனும் காழியார்
வாடா மலராள் பங்கர் அவர்போலாம்
ஏடார் புரமூன்று எரித்த இறைவரே
(6)
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாம்
செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரே
(7)
கொல்லை விடைமுன் பூதம் குனித்தாடும்
கல்ல வடத்தை உகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தார் அவர்போலாம்
பல்ல இடத்தும் பயிலும் பரமரே
(8)
எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார்
எடுத்த பாடற்கிரங்கும் அவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே
(9)
ஆற்றலுடைய அரியும் பிரமனும்
தோற்றம் காணா வென்றிக் காழியார்
ஏற்றம் ஏறங்கேறும் அவர்போலாம்
கூற்றம் மறுகக் குமைத்த குழகரே
(10)
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத்தையரே
(11)
காரார் வயல்சூழ் காழிக்கோன் தனைச்
சீரார் ஞானசம்பந்தன் சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத்தினிதா இருப்பரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page