சீகாழி – சம்பந்தர் தேவாரம் (21):

<– சீகாழி

(1)
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
(2)
போதையார் பொற்கிண்ணத்தடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே
(3)
தொண்டணை செய்தொழில் துயரறுத்து உய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணை ஆகவோர் பெருந்தகை இருந்ததே
(4)
அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே
(5)
அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
(6)
மற்றொரு பற்றிலை நெஞ்சமே, மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை அவளொடும்
பெற்றெனை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே
(7)
குறைவளைவது மொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே
(8)
அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடுயாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே
(9)
நெடியவன் பிரமனும் நினைப்பரிதாய் அவர்
அடியொடு முடியறியா அழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
(10)
தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொற் களைந்தடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேர்அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே
(11)
கருந்தடம் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடம் கொங்கையோடிருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம்பந்தன் செந்தமிழ்
விரும்புவார் அவர்கள்போய் விண்ணுலகு ஆள்வரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page