சீகாழி – சம்பந்தர் தேவாரம் (20):

<– சீகாழி

(1)
பிரமனூர், வேணுபுரம், புகலி, வெங்குருப் பெருநீர்த் தோணி
புரம், மன்னு பூந்தராய், பொன்னஞ் சிரபுரம், புறவம், சண்பை
அரன்மன்னு தண்காழி, கொச்சைவயம் உள்ளிட்டங்கு ஆதியாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் நாம் பரவும் ஊரே
(2)
வேணுபுரம், பிரமனூர், புகலி, பெரு வெங்குரு, வெள்ளத்தோங்கும்
தோணிபுரம், பூந்தராய், தூநீர்ச் சிரபுரம், புறவம், காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயம், சண்பை கூரும் செல்வம்
காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே
(3)
புகலி; சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம், காழி
நிகரில் பிரமபுரம், கொச்சைவயம், நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோடு அந்தண் தராய், அமரர் பெருமாற்கின்பம்
பகரு நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே
(4)
வெங்குருத், தண்புகலி, வேணுபுரம், சண்பை, வெள்ளம் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தராய், தொகு பிரமபுரம், தொல் காழி
தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலை பண்டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே
(5)
தொன்னீரில் தோணிபுரம், புகலி, வெங்குருத், துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம், பூந்தராய், பிரமனூர், எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவம், கொச்சைவயம், சிலம்பன் நகரா, நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம் நாம் புகழும் ஊரே
(6)
தண்ணம் தராய், புகலி, தாமரையான் ஊர், சண்பை, தலைமுன் ஆண்ட
அண்ணல் நகர், கொச்சைவயம், தண் புறவம், சீர் அணியார் காழி
விண்ணியல் சீர் வெங்குரு, நல் வேணுபுரம், தோணிபுரம், மேலாலேந்து
கண்ணுதலான் மேவிய நற்கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே
(7)
சீரார் சிரபுரமும், கொச்சைவயம், சண்பையொடு புறவம், நல்ல
ஆராத் தராய், பிரமனூர், புகலி, வெங்குருவொடு அந்தண் காழி
ஏரார் கழுமலமும், வேணுபுரம், தோணிபுரம் என்றென்று உள்கிப்
பேரான் நெடியவனும்  நான்முகனும் காண்பரிய பெருமான் ஊரே
(8)
புறவம், சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு புகலி, காழி
நறவமிகு சோலைக் கொச்சைவயம், தராய், நான்முகன் தனூர்
விறலாய வெங்குருவும், வேணுபுரம், விசயன் மேல் அம்பெய்து
திறலால் அரக்கனைச் செற்றான் தன் கழுமலம் நாம் சேரும் ஊரே
(9)
சண்பை, பிரமபுரம், தண்புகலி, வெங்குரு, நற்காழி, சாயாப்
பண்பார் சிரபுரமும், கொச்சைவயம், தராய், புறவம், பார்மேல்
நண்பார் கழுமலம், சீர் வேணுபுரம், தோணிபுரம், நாணிலாத
வெண்பல் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமலன் ஊரே
(10)
செழுமலிய பூங்காழி, புறவம், சிரபுரம், சீர்ப் புகலி, செய்ய
கொழு மலரான் நன்னகரம் தோணிபுரம், கொச்சைவயம், சண்பையாய
விழுமியசீர் வெங்குருவொடு, ஓங்கு தராய், வேணுபுரம், மிகுநன் மாடக்
கழுமலம், என்றின்ன பெயர் பன்னிரண்டும் கண்ணுதலான் கருதும் ஊரே
(11)
கொச்சைவயம், பிரமனூர், புகலி, வெங்குருப், புறவம், காழி
நிச்சல் விழவுஓவா நீடார் சிரபுரம், நீள் சண்பை, மூதூர்
நச்சினிய பூந்தராய், வேணுபுரம், தோணிபுரமாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page