சீகாழி – சம்பந்தர் தேவாரம் (23):

<– சீகாழி

(1)
அயிலுறு படையினர், விடையினர், முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல் வனமுலைஒரு பால் மகிழ்பவர், வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர், எருதுகந்தேறிப் பாடியும் ஆடியும் பலிகொள்வர், வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென உடையார், கழுமல நினையநம் வினை கரிசறுமே
(2)
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர், கொடுமுடி உறைபவர், படுதலைக் கையர்
பண்டலர் அயன்சிரம் அரிந்தவர், பொருந்தும் படர்சடை அடிகளார் பதியதன் அயலே
வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவு மறிகடல் திரை கொணர்ந்தெற்றிய கரைமேல்
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும், கழுமல நினையநம் வினை கரிசறுமே
(3)
எண்ணிடை ஒன்றினர், இரண்டினர் உருவம், எரியிடை மூன்றினர், நான்மறையாளர்
மண்ணிடை ஐந்தினர், ஆறினர் அங்கம், வகுத்தனர் ஏழிசை, எட்டிரும் கலைசேர்
பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர், பத்தர் பாடிநின்று அடிதொழ, மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர், கருதிய கோயில் கழுமல நினையநம் வினை கரிசறுமே
(4)
எரியொரு கரத்தினர், இமையவர்க்கிறைவர், ஏறுகந்தேறுவர், நீறுமெய் பூசித்
திரிதரும் இயல்பினர், அயலவர் புரங்கள் தீயெழ விழித்தனர், வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவரல் அஞ்ச, மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக்கு இடமாம், கழுமல நினையநம் வினை கரிசறுமே
(5)
ஊரெதிர்ந்திடு பலிதலை கலனாக உண்பவர், விண் பொலிந்திலங்கிய உருவர்
பாரெதிர்ந்து அடிதொழ, விரைதரு மார்பில் படஅரவு ஆமை அக்கணிந்தவர்க்கிடமாம்
நீரெதிர்ந்திழி மணி நித்தில முத்தநிரை சுரிசங்கமொடு ஒண்மணி வரன்றிக்
காரெதிர்ந்தோதம் வன்திரை கரைக்கெற்றும், கழுமல நினையநம் வினை கரிசறுமே
(6)
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியுமாகி, முடியுடை அமரர்கள் அடிபணிந்தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேரருளாளனார் பேணிய கோயில்
பொன்னியல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினராகிக்
கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமல நினையநம் வினைகரிசறுமே
(7)
கொலைக்கணித்தா வரு கூற்றுதை செய்தார், குரைகழல் பணிந்தவர்க்கருளிய பொருளின்
நிலைக்கணித்தா வர நினைய வல்லார்தம் நெடுந்துயர் தவிர்த்தஎம் நிமலருக்கிடமாம்
மலைக்கணித்தா வர வன்திரை முரல மதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்
கலைக்கணம் கானலின் நீழலில் வாழும், கழுமல நினையநம் வினை கரிசறுமே
(8)
புயம்பல உடைய தென்இலங்கையர் வேந்தன், பொருவரை எடுத்தவன் பொன்முடி திண்தோள்
பயம் பலபட அடர்த்தருளிய பெருமான், பரிவொடும் இனிதுறை கோயிலதாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினுமெங்கும் வேறுவேறு யுகங்களில் பெயருளதென்னக்
கயம்பல படக்கடல் திரை கரைக்கெற்றும், கழுமல நினையநம் வினை கரிசறுமே
(9)
விலங்கல் ஒன்றேந்தி வன்மழை தடுத்தோனும், வெறிகமழ் தாமரையோனும் என்றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரிதாய பரிசினன், மருவிநின்று இனிதுறை கோயில்
மலங்கி வன்திரை வரையெனப் பரந்தெங்கும், மறிகடலோங்கி வெள்ளிப்பியும் சுமந்து
கலங்கடல் சரக்கொடு நிரக்க வந்தேறும், கழுமல நினையநம் வினை கரிசறுமே
(10)
ஆம்பல தவமுயன்ற அவுரைசொல்லும் அறிவிலாச் சமணரும் தேரரும் கணிசேர்
நோம்பல தவமறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
சாம்பலும் பூசிவெண்தலை கலனாகத் தையலார் இடுபலி வையகத்தேற்றுக்
காம்பன தோளியொடினிதுறை கோயில், கழுமல நினையநம் வினை கரிசறுமே
(11)
கலிகெழு பாரிடை ஊரென உளதாம், கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர்மேல்
வலிகெழு மனமிக வைத்தவன், மறைசேர் வருங்கலை ஞானசம்பந்தன் தமிழின்
ஒலிகெழு மாலையென்றுரை செய்த பத்தும் உண்மையினால் நினைந்தேத்த வல்லார்மேல்
மெலிகெழு துயர் அடையா, வினை சிந்தும், விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page