(1)
மடல்மலி கொன்றை, துன்று, வாள் எருக்கும், வன்னியும், மத்தமும் சடைமேல்
படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் தம்இடம் பகரில்
விடலொளி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள்ளருவிக்
கடலொலி ஓதம் மோத வந்தலைக்கும் கழுமல நகர் எனலாமே
(2)
மின்னிய அரவும், வெறிமலர் பலவும், விரும்பிய திங்களும் தங்கு
சென்னியதுடையான், தேவர்தம் பெருமான், சேயிழையொடும் உறைவிடமாம்
பொன்னியல் மணியும், உரிகரி மருப்பும், சந்தமும், முந்து வன்திரைகள்
கன்னியர்ஆடக் கடலொலி மலியும் கழுமல நகர் எனலாமே
(3)
சீருறு தொண்டர் கொண்டடி போற்றச், செழுமலர் புனலொடு தூபம்
தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார் தங்கிடம், எங்கும்
ஊருறு பதிகள் உலகுடன் பொங்கி, ஒலிபுனல் கொளஉடன் மிதந்த
காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல நகர் எனலாமே
(4)
மண்ணினார் ஏத்த, வானுளார் பரச, அந்தரத்தமரர்கள் போற்றப்
பண்ணினார் எல்லாம் பலபல வேடமுடையவர் பயில்விடம், எங்கும்
எண்ணினால் மிக்கார், இயல்பினால் நிறைந்தார், ஏந்திழை அவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டொளி பரக்கும் கழுமல நகர் எனலாமே
(5)
சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன் கரமும், முன்னியங்கு
பரிதியான் பல்லும் இறுத்தவர்க்கருளும் பரமனார் பயின்றினிது இருக்கை
விருது நான்மறையும் அங்கமோர்ஆறும் வேள்வியும் வேட்டவர், ஞானம்
கருதினார், உலகில் கருத்துடையார் சேர் கழுமல நகர் எனலாமே
(6)
புற்றில் வாளரவும் ஆமையும் பூண்ட புனிதனார், பனிமலர்க் கொன்றை
பற்றி வான்மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்றினிது இருக்கை
செற்று வன்திரைகள் ஒன்றொடொன்று ஓடிச் செயிர்த்து, வண்சங்கொடு அங்கம்
கற்றுறை வரைகள் கரைக்கு வந்துரைக்கும் கழுமல நகர் எனலாமே
(7)
அலைபுனல் கங்கை தங்கிய சடையார், அடல்நெடு மதிலொரு மூன்று
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட குழகனார் கோயிலது என்பர்
மலையின் மிக்குயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றும்அற்று இடையிடை எங்கும்
கலை களித்தேறிக் கானலில் வாழும் கழுமல நகர் எனலாமே
(8)
ஒருக்கமுன் நினையாத் தக்கன் தன்வேள்வி உடைதர உழறிய படையார்
அரக்கனை வரையால் ஆற்றல்அன்றழித்த அழகனார் அமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப், பலபல அறங்களே பயிற்றிக்
கரக்குமாறறியா வண்மையார் வாழும் கழுமல நகர் எனலாமே
(9)
அருவரை பொறுத்த ஆற்றலினானும், மணிகிளர் தாமரையானும்
இருவரும் ஏத்த எரியுருவான இறைவனார் உறைவிடம் வினவில்
ஒருவர் இவ்வுலகில் வாழ்கிலா வண்ணம், ஒலிபுனல் வெள்ள முன்பரப்பக்
கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனலாமே
(10)
உரிந்துயர் உருவில் உடை தவிர்ந்தாரும், அத்துகில் போர்த்துழல்வாரும்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச் செம்மையார் நன்மையால் உறைவாம்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
கருந்தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனலாமே
(11)
கானலம் கழனி ஓதம் வந்துலவும் கழுமலநகர் உறைவார் மேல்
ஞானசம்பந்தன் நற்றமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊன சம்பந்தத்துறுபிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர், மண்மிசைப் பிறவார், மற்றிதற்காணையும் நமதே
பேணுமினே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...