(1)
சேஉயரும் திண்கொடியான் திருவடியே சரணென்று சிறந்தஅன்பால்
நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிரும் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே
(2)
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ண வெண்ணீறலங்கரித்தான் அமரர்தொழ அமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும் இறைவனது தன்மைபாடிக்
கருந்தடம் கண்ணார் கழல் பந்தம்மானைப் பாட்டயரும் கழுமலமே
(3)
அலங்கல்மலி வானவரும் தானவரும் அலைகடலைக் கடையப், பூதம்
கலங்கஎழு கடுவிடம் உண்டிருண்ட மணிகண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கல்அமர் புயல்மறந்து மீன் சனிபுக்கூன் சலிக்கும் காலத்தானும்
கலங்கலிலா மனப்பெரு வண்கை உடைய மெய்யர் வாழ் கழுமலமே
(4)
பாரிதனை நலிந்து அமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசு வெம்மைப்
போர்இசையும் புரமூன்றும் பொன்றஒரு சிலைவளைத்தோன் பொருந்தும் கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் சூளிகைமேல் மகப் பாராட்டக்
காரிசையும் விசும்பியங்கும் கணங்கேட்டு மகிழ்வெய்தும் கழுமலமே
(5)
ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும்
நீர்நின்ற கங்கை நகு வெண்தலைசேர் செஞ்சடையான் இகழும் கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி இசை வெள்ளிமலை என்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களால் கவின்பெருகு சுதைமாடக் கழுமலமே
(6)
தருஞ்சரதம் தந்தருள் என்றடி நினைந்து, தழல்அணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார் தோழமை அளித்த பெருமான் கோயில்
அரிந்தவயல் அரவிந்த மதுஉகுப்ப, அதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய அகம்பாயும் கழுமலமே
(7)
புவிமுதல் ஐம்பூதமாய்ப், புலனைந்தாய், நிலனைந்தாய்க், கரண நான்காய்
அவையவை சேர் பயனுருவாய், அல்லஉருவாய் நின்றான் அமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத், தாழவிடு கொம்புதைப்பக், கொக்கின் காய்கள்
கவண்எறி கல்போல் சுனையில் கரைசேரப் புள்ளிரியும் கழுமலமே
(8)
அடல்வந்த வானவரை அழித்துலகு தெழித்துழலும் அரக்கர்கோமான்
மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல் பணிகொண்டோன் மேவும் கோயில்
நடவந்த உழவர்இது நடவொணா வகை பரலாய்த்தென்று துன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயல் கரைகுவிக்கும் கழுமலமே
(9)
பூமகள்தன் கோன், அயனும் புள்ளினொடு கேழலுருவாகிப் புக்கிட்டு
ஆமளவும் சென்று முடிஅடி காணா வகைநின்றான் அமருங்கோயில்
பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்தும் கழுமலமே
(10)
குணமின்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில்
உணல்மருவும் சமணர்களும் உணராத வகை நின்றான் உறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி இவைஇசைய மண்மேல் தேவர்
கணமருவு மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்கும் கழுமலமே
(11)
கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல், நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான் நயந்துசொன்ன
சொற்றுணையோர் ஐந்தினொடைந்து இவைவல்லார், தூமலராள் துணைவராகி
முற்றுலகம் அதுஆண்டு முக்கணான் அடிசேர முயல்கின்றாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...