(1)
அறையும் பூம்புனலோடும் ஆடரவச் சடை தன்மேல்
பிறையும் சூடுவர், மார்பில் பெண்ணொரு பாகம் அமர்ந்தார்
மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வியறாத
குறைவில் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே
(2)
சுண்ணத்தர், தோலொடு நூல்சேர் மார்பினர், துன்னிய பூதக்
கண்ணத்தர், வெங்கனலேந்திக் கங்குல் நின்றாடுவர், கேடில்
எண்ணத்தர், கேள்விநல் வேள்வியறாதவர் மாலெரி ஓம்பும்
வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே
(3)
பாலையன்ன வெண்ணீறு பூசுவர், பல்சடை தாழ
மாலையாடுவர், கீத மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால் கடலோதம் வெண்திரை கரைமிசை விளங்கும்
கோல மாமணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே
(4)
கடிகொள் கூவிள மத்தம் கமழ்சடை நெடுமுடிக்கணிவர்
பொடிகள் பூசிய மார்பில் புனைவர், நன்மங்கையொர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே
(5)
ஆடல் மாமதி உடையார், ஆயின பாரிடம் சூழ
வாடல் வெண்தலையேந்தி வையகம் இடுபலிக்குழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொடு ஆடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே
(6)
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேல்
துண்ட வெண்பிறை அணிவர், தொல்வரை வில்லதுவாக
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள, விடைமேல்
கொண்ட கோலமதுடையார், கொச்சைவயம் அமர்ந்தாரே
(7)
…
(8)
அன்ற ஆல் நிழலமர்ந்தறவுரை நால்வர்க்கருளிப்
பொன்றினார் தலையோட்டில் உண்பது, பொருகடல் இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர், வான்தோய்
குன்றமன்ன பொன்மாடக் கொச்சை வயம் அமர்ந்தாரே
(9)
சீர்கொள் மாமலரானும் செங்கண்மால் என்றிவரேத்த
ஏர்கொள் வெவ்வழலாகி எங்கும்உற நிமிர்ந்தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர், பால்மொழியோடும்
கூர்கொள் வேல் வலனேந்திக் கொச்சைவயம் அமர்ந்தாரே
(10)
குண்டர் வண்துவராடை போர்த்ததொர் கொள்கையினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல, மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பினர், ஒண்கொடியோடும்
கொண்டல் சேர் மணிமாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே
(11)
கொந்தணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய
அந்தணன் அடியேத்தும் அருமறை ஞானசம்பந்தன்
சந்தமார்ந்தழகாய தண்தமிழ் மாலை வல்லோர்போய்
முந்தி வானவரோடும் புகவலர் முனைகெட வினையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...