சீகாழி – சம்பந்தர் தேவாரம் (30):

<– சீகாழி

(1)
பல்லடைந்த வெண்தாலையில் பலி கொள்வதன்றியும் போய்
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தல்என்னே
சொல்லடைந்த தொல் மறையோடங்கம் கலைகளெல்லாம்
செல்லடைந்த செல்வர் வாழும் சிரபுர மேயவனே
(2)
கொல்லை முல்லை நகையினாள்ஓர் கூறதன்றியும் போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதரவென்னை கொலாம்
சொல்லநீண்ட பெருமையாளர், தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுர மேயவனே
(3)
நீரடைந்த சடையின் மேலோர் நிகழ்மதி அன்றியும்போய்
ஊரடைந்த வேறதேறி உண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுர மேயவனே
(4)
கையடைந்த மானினோடு காரரவன்றியும் போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல்என்னே
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுர மேயவனே
(5)
புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னை
கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடும்
சிரமெடுத்த கைகள் கூப்பும் சிரபுர மேயவனே
(6)
கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்தலென்னே
எண்ணுமூன்று கனலும்ஓம்பி எழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுர மேயவனே
(7)
குறைபடாத வேட்கையோடு, கோல்வளையாள் ஒருபால்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மை என்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுர மேயவனே
(8)
மலையெடுத்த வாளரக்கன் அஞ்சஒரு விரலால்
நிலையெடுத்த கொள்கையானே, நின்மலனே, நினைவார்
துலையெடுத்த சொல்பயில்வார் மேதகு வீதிதோறும்
சிலையெடுத்த தோளினானே சிரபுர மேயவனே
(9)
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேதம் ஓதலார்கள் நம்துணை என்றிறைஞ்சச்
சேலு மேயும் கழனிசூழ்ந்த சிரபுர மேயவனே
(10)
புத்தரோடு சமணர் சொற்கள் புறனுரை என்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மையதென்னை கொலாம்
மத்தயானை உரியும்போர்த்து மங்கையொடும் உடனே
சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுர மேயவனே
(11)
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுர மேயவனை
அங்கநீண்ட மறைகள் வல்ல அணிகொள் சம்பந்தன் உரை
பங்கநீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன் மேல்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையினால் அவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page