(1)
பங்கமேறு மதிசேர் சடையார், விடையார், பலவேதம்
அங்கமாறு மறை நான்கவையும் ஆனார், மீனாரும்
வங்கமேவு கடல்வாழ் பரதர் மனைக்கே நுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனும் சண்பை நகராரே
(2)
சூதகஞ்சேர் கொங்கையாள்ஓர் பங்கர், சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார், பூத கணநாதர்
மேதகஞ்சேர் மேகம் அந்தண் சோலையில் விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர் சேர் சண்பை நகராரே
(3)
மகரத்தாடு கொடியோன் உடலம் பொடிசெய்து, அவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்
பகரத் தாரா அன்னம் பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப் புன்னை தாழைப் பொழில்சேர் சண்பை நகராரே
(4)
மொய் வல்லசுரர் தேவர் கடைந்த முழுநஞ்சதுண்ட
தெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ்சுத்திக்
கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர், காதலால்
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே
(5)
கலமார் கடலுள் விடமுண்டமரர்க்கு அமுதமருள் செய்த
குலமார் கயிலைக் குன்றதுடைய கொல்லை எருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலமார் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே
(6)
மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்து, மெய்ம் மாலான
சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன், மேதக்க
ஆகரஞ்சேர் இப்பி முத்தை அந்தண் வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகள்உந்தும் சண்பை நகராரே
(7)
…
(8)
இருளைப் புரையும் நிறத்தில் அரக்கன்தனை ஈடழிவித்து
அருளைச் செய்யும் அம்மான், ஏரார் அந்தண் கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி அளக்கர் வரையார் திரைக்கையால்
தரளத்தோடு பவளம்ஈனும் சண்பை நகராரே
(9)
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை மேல்அயனும்
எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறையோதி
தண்டார் குவளைக் கள்அருந்தித் தாமரைத் தாதின்மேல்
பண்தான் கொண்டு வண்டுபாடும் சண்பை நகராரே
(10)
போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளும் நிமலன், இருநான்கின்
மாதி சித்தர், மாமறையில் மன்னிய தொல்நூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே
(11)
வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச்
சந்திபோதில் சமாதிசெய்யும் சண்பை நகர்மேய
அந்திவண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...