சீகாழி – சம்பந்தர் தேவாரம் (2)

<– சீகாழி

(1)
நறவநிறை வண்டறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம்செறி வண்கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்
புறவமுறை வண்பதியா மதியார் புரமூன்று எரிசெய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த உமையோடிருந்தானே
(2)
உரவன், புலியின் உரிதோலாடை உடைமேல் படநாகம்
விரவிவிரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர் தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்துப் புறவம் பதியாக
இரவும்பகலும் இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(3)
பந்தமுடைய பூதம்பாடப் பாதம் சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டு எரியாடி
அந்தண்கடல் சூழ்ந்து, அழகார் புறவம் பதியா அமர்வெய்தி
எந்தம்பெருமான்  இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(4)
நினைவார் நினைய இனியான், பனியார் மலர்தூய் நித்தலும்
கனையார் விடையொன்றுடையான், கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனை வார்சடையின் முடியான், கடல்சூழ் புறவம் பதியாக
எனைஆளுடையான், இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(5)
செங்கண்அரவு நகுவெண்தலையும், முகிழ்வெண்திங்களும்
தங்கு சடையன், விடையன், உடையன் சரிகோவண ஆடை
பொங்கு திரை வண்கடல் சூழ்ந்தழகார் புறவம் பதியாக
எங்கும்பரவி இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(6)
பின்னுசடைகள் தாழக் கேழல்எயிறு பிறழப்போய்
அன்னநடையார் மனைகள்தோறும் அழகார் பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில் சூழ்ந்தழகார் புறவம் பதியாக
என்னைஉடையான், இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(7)
உண்ணற்கரிய நஞ்சைஉண்டு, ஒருதோழம் தேவர்
விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்
பண்ணில் சிறை வண்டறை பூஞ்சோலைப் புறவம் பதியாக
எண்ணில் சிறந்த இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(8)
விண்தான்அதிர வியனார்கயிலை வேரோடு எடுத்தான்தன்
திண்தோள்உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான்ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதியாக
எண்தோள் உடையான், இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(9)
நெடியான், நீள்தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படியா மேனி உடையான், பவள வரைபோல் திருமார்பில்
பொடியார் கோலம் உடையான், கடல்சூழ் புறவம் பதியாக
இடியார் முழவார் இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(10)
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவில் சிறுதேரர்
கோலும் மொழிகள் ஒழியக் குழுவும் தழலும் எழில்வானும்
போலும் வடிவும் உடையான், கடல்சூழ் புறவம் பதியாக
ஏலும் வகையால் இமையோர்ஏத்த உமையோடிருந்தானே
(11)
பொன்னார் மாட நீடும்செல்வப் புறவம் பதியாக
மின்னார் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனைத்
தன்னார்வம்செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பன்னாள் பாடியாடப் பிரியார் பரலோகம்தானே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page