சீகாழி – சம்பந்தர் தேவாரம் (28):

<– சீகாழி

(1)
திருந்துமா களிற்றிள மருப்பொடு திரள்மணிச் சந்தமுந்திக்
குருந்துமா குரவமும் குடசமும் பீலியும் சுமந்துகொண்டு
நிரந்துமா வயல்புகு நீடு கோட்டாறுசூழ் கொச்சை மேவிப்
பொருந்தினார் திருந்தடி போற்றிவாழ் நெஞ்சமே புகலதாமே
(2)
ஏலமார் இலவமோடின மலர்த் தொகுதியாய் எங்குநுந்திக்
கோலமா மிளகொடு கொழுங்கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு
ஆலியா வயல்புகும் அணிதரு கொச்சையே நச்சிமேவும்
நீலமார் கண்டனை நினை மடநெஞ்சமே, அஞ்சல் நீயே
(3)
பொன்னுமா மணி கொழித்தெறி புனல் கரைகள்வாய் நுரைகள்உந்திக்
கன்னிமார் முலைநலம் கவர வந்தேறு கோட்டாறுசூழ
மன்னினார் மாதொடும் மருவிடம் கொச்சையே, மருவிநாளும்
முன்னைநோய் தொடருமாறில்லை காண் நெஞ்சமே, அஞ்சல்நீயே
(4)
கந்தமார் கேதகைச் சந்தனக் காடுசூழ் கதலிமாடே
வந்துமா வள்ளையின் பவரளிக் குவளையைச் சாடியோடக்
கொந்துவார் குழலினார் குதிகொள் கோட்டாறுசூழ் கொச்சைமேய
எந்தையார் அடி நினைந்துய்யலாம் நெஞ்சமே, அஞ்சல்நீயே
(5)
மறைகொளும் திறலினார் ஆகுதிப் புகைகள் வான் அண்டமிண்டிச்
சிறைகொளும் புனலணி செழும்பதி திகழ்மதில் கொச்சை தன்பால்
உறைவிடம் என மனமது கொளும், பிரமனார் சிரமறுத்த
இறைவனதடியிணை இறைஞ்சிவாழ் நெஞ்சமே, அஞ்சல் நீயே
(6)
சுற்றமும்  மக்களும் தொக்கஅத் தக்கனைச் சாடியன்றே
உற்ற மால்வரை உமைநங்கையைப் பங்கமா உள்கினான், ஓர்
குற்றமில் அடியவர் குழுமிய வீதிசூழ் கொச்சைமேவி
நற்றவம் அருள்புரி நம்பனை நம்பிடாய், நாளும் நெஞ்சே
(7)
கொண்டலார் வந்திடக் கோலவார் பொழில்களில் கூடிமந்தி
கண்டவார் கழைபிடித்தேறி மாமுகில்தனைக் கதுவும் கொச்சை
அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய ஆலம்
உண்ட மாகண்டனார் தம்மையே உள்குநீ, அஞ்சல் நெஞ்சே
(8)
அடலெயில் அரக்கனார் நெருக்கிமா மலையெடுத்தார்த்த வாய்கள்
உடல்கெடத் திருவிரல் ஊன்றினான் உறைவிடம், ஒளிகொள் வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமும் தொத்துவண் புன்னைமாடே
பெடையொடும் குருகினம் பெருகுதண் கொச்சையே பேணு நெஞ்சே
(9)
அரவினில் துயிறரும் அரியும், நல் பிரமனும் அன்றயர்ந்து
குரைகழல் திருமுடி அளவிட அரியவர், கொங்கு செம்பொன்
விரிபொழில் இடைமிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
கரியநன் மிடறுடைக் கடவுளார் கொச்சையே கருதுநெஞ்சே
(10)
கடுமலி உடலுடை அமணரும், கஞ்சியுண் சாக்கியரும்
இடுமற உரைதனை இகழ்பவர் கருதுநம் ஈசர், வானோர்
நடுவுறை நம்பனை, நான்மறையவர் பணிந்தேத்த ஞாலம்
உடையவன், கொச்சையே உள்கிவாழ் நெஞ்சமே, அஞ்சல் நீயே
(11)
காய்ந்துதம் காலினால் காலனைச் செற்றவர், கடிகொள் கொச்சை
ஆய்ந்து கொண்டிடமென இருந்த நல்அடிகளை ஆதரித்தே
ஏய்ந்ததொல் புகழ்மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்ன
வாய்ந்தஇம் மாலைகள் வல்லவர் நல்லர் வானுலகின் மேலே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page