(1)
வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலன் இடம்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயல் சிரபுரமே
(2)
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்
திங்களொடு அரவணி திகழ்முடியன்
மங்கையொடினிதுறை வளநகரம்
செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே
(3)
பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயில்வேவ
வரிந்த வெஞ்சிலை பிடித்து அடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே
(4)
நீறணி மேனியன், நீள்மதியோடு
ஆறணி சடையினன், அணியிழையோர்
கூறணிந்தினிதுறை குளிர் நகரம்
சேறணி வளவயல் சிரபுரமே
(5)
அருந்திறல் அவுணர்கள் அரணழியச்
சரந்துரந்தெரி செய்த சங்கரன்ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே
(6)
கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணும்அவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே
(7)
வானமர் மதியொடு மத்தம்சூடித்
தானவர் புரமெய்த சைவன்இடம்
கானமர் மடமயில் பெடைபயிலும்
தேனமர் பொழிலணி சிரபுரமே
(8)
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக்கன் முடிதோள்
இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே
(9)
வண்ணநன் மலருறை மறையவனும்
கண்ணனும் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற ஓங்கிய விமலன்இடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே
(10)
வெற்றரை உழல்பவர் விரிதுகிலார்
கற்றிலர் அறவுரை புறன்உரைக்கப்
பற்றலர் திரிபுரம் மூன்றும் வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே
(11)
அருமறை ஞான சம்பந்தன் அந்தண்
சிரபுர நகருறை சிவன்அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...