சீகாழி – சம்பந்தர் தேவாரம் (32):

<– சீகாழி

(1)
நம்பொருள் நம்மக்கள் என்று நச்சிஇச்சை செய்துநீர்
அம்பரம் அடைந்துசால அல்லல் உய்ப்பதன் முனம்
உம்பர் நாதன், உத்தமன், ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன் மேவு நன்னகர் நலங்கொள் காழி சேர்மினே
(2)
பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்து சாவதன் முனம் இசைந்துநீர்
தீவமாலை தூபமும் செறிந்த கையராகி நம்
தேவதேவன் மன்னும்ஊர் திருந்துகாழி சேர்மினே
(3)
சோறுகூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு
ஏறுசுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம்
ஆறும்ஓர் சடையினான், ஆதியானைச் செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள் காழி சேர்மினே
(4)
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் எனும்உரை உணர்ந்து கேட்பதன் முனம்
பிச்சர் நச்சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள் காழி சேர்மினே
(5)
கண்கள் காண் பொழிந்து, மேனி கன்றி ஒன்றலாத நோய்
உண்கிலாமை செய்து நும்மை உய்த்தழிப்பதன் முனம்
விண்குலாவு தேவருய்ய வேலை நஞ்சமுது செய்
கண்கள் மூன்றுடைய எம் கருத்தர் காழி சேர்மினே
(6)
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினில் கிடந்திடாது எழும்மினோ
பல்லில் வெண்தலையினில் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லை ஏறதேறுவான் கோலக்காழி சேர்மினே
(7)
(8)
பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டராய் அடுத்திரைப்பதன் முனம்
மைமிகுத்த மேனிவாள் அரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப் பரமர் காழி சேர்மினே
(9)
காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய் தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்பதன் முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே
(10)
நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் முனம்
தலைபறித்த கையர் தேரர் தாம் தரிப்பரியவன்
சிலைபிடித்து எயிலெய்தான் திருந்து காழி சேர்மினே
(11)
தக்கனார் தலையரிந்த சங்கரன், தனதரை
அக்கினோடரவசைத்த அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்
மிக்க இன்பமெய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page