சீகாழி – சம்பந்தர் தேவாரம் (33):

<– சீகாழி

(1)
அடலேறமரும் கொடி அண்ணல்
மடலார் குழலாளொடு மன்னும்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வார் அவர் தூநெறியாரே
(2)
திரையார் புனல்சூடிய செல்வன்
வரையார் மகளோடு மகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர் தூவுமின் நின்றே
(3)
இடியார் குரல் ஏறுடை எந்தை
துடியார் இடையாளொடு துன்னும்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே
(4)
ஒளியார் விடமுண்ட ஒருவன்
அளியார் குழல் மங்கையொடு அன்பாய்க்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண்டவர் இன்பே
(5)
பனியார் மலரார் தரு பாதன்
முனிதான் உமையோடு முயங்கிக்
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதாம் அதுகண்டவர் ஈடே
(6)
கொலையார் தருகூற்றம் உதைத்து
மலையான் மகளோடு மகிழ்ந்தான்
கலையார் தொழுதேத்திய காழி
தலையால் தொழுவார் தலையாரே
(7)
திருவார் சிலையால் எயிலெய்து
உருவார் உமையோடுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவாதவர் வான் மருவாரே
(8)
அரக்கன் வலிஒல்க அடர்த்து
வரைக்கும் மகளோடு மகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூவு நினைந்தே
(9)
இருவர்க்கெரியாகி நிமிர்ந்தான்
உருவில் பெரியாளொடு சேரும்
கருநல் பரவை கமழ் காழி
மருவப் பிரியும் வினை மாய்ந்தே
(10)
சமண் சாக்கியர் தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோடுடன் அன்பாய்க்
கமழ்ந்தார் பொழில் சூழ்தரு காழி
சுமந்தார் மலர்தூவுதல் தொண்டே
(11)
நலமாகிய ஞான சம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையாக நினைந்தவர் பாடல்
வலர்ஆனவர் வான் அடைவாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page