சீகாழி – சம்பந்தர் தேவாரம் (36):

<– சீகாழி

(1)
நல்லானை, நான்மறையோடியல்ஆறங்கம்
வல்லானை, வல்லவர்பால் மலிந்தோங்கிய
சொல்லானைத், தொன்மதில் காழியே கோயிலாம்
இல்லானை ஏத்த நின்றார்க்குளது இன்பமே
(2)
நம்மானம் மாற்றி நமக்கருளாய் நின்ற
பெம்மானைப், பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை, அந்தணர் சேரும் அணிகாழி
எம்மானை ஏத்தவல்லார்க்கிடர் இல்லையே
(3)
அருந்தானை அன்புசெய்து ஏத்தகில்லார் பால்
பொருந்தானைப் பொய்யடிமைத் தொழில் செய்வாருள்
விருந்தானை, வேதியர் ஒதி மிடைகாழி
இருந்தானை ஏத்துமின் நும்வினை ஏகவே
(4)
புற்றானைப், புற்றரவம் அரையின் மிசைச்
சுற்றானைத், தொண்டு செய்வார்அவர் தம்மொடும்
அற்றானை, அந்தணர் காழியமர் கோயில்
பற்றானைப் பற்றி நின்றார்க்கில்லை பாவமே
(5)
நெதியானை, நெஞ்சிடம் கொள்ள நினைவார்தம்
விதியானை, விண்ணவர் தாம் வியந்தேத்திய
கதியானைக், காருலவும் பொழில் காழியாம்
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே
(6)
செப்பான மென் முலையாளைத் திகழ்மேனி
வைப்பானை, வார் கழலேத்தி நினைவார்தம்
ஒப்பானை, ஓதமுலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே
(7)
துன்பானைத் துன்பமழித்து அருளாக்கிய
இன்பானை, ஏழிசையின் நிலை பேணுவார்
அன்பானை, அணிபொழில் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல்லார் வினை நாசமே
(8)
குன்றானைக், குன்றெடுத்தான் புயம் நாலைந்தும்
வென்றானை, மென்மலரானொடு மால்தேட
நின்றானை, நேரிழையாளொடும் காழியுள்
நன்றானை நம்பெருமானை நணுகுமே
(9)
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்அவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையினானைப் புனல்காழிக்
கோவாய கொள்கையினான் அடி கூறுமே
(10)
(11)
கழியார் சீரோத மல்கும் கடற்காழியுள்
ஒழியாது கோயில் கொண்டானை உகந்துள்கித்
தழியார்சொல் ஞானசம்பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுலகும் பெறுவார்களே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page