சீகாழி – சம்பந்தர் தேவாரம் (61):

<– சீகாழி

(1)
காலை நன்மாமலர் கொண்டடி பரவிக் கைதொழு மாணியைக் கறுத்த வெங்காலன்
ஓலமதிட, முன்உயிரொடு மாள உதைத்தவன், உமையவள் விருப்பன், எம்பெருமான்
மாலை வந்தணுக ஓதம் வந்துலவி, மறிதிரை சங்கொடு பவள முன்உந்தி
வேலை வந்தணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(2)
பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் பிறையொடும் அரவினை அணிந்தழகாகப்
பண்ணினைப் பாடியாடி முன் பலிகொள் பரமர், எம் அடிகளார், பரிசுகள் பேணி
மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரை கடல் முகந்தெடுப்ப மற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழி கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(3)
ஓரியல்பில்லா உருவமதாகி, ஒண்திறல் வேடனதுரு அதுகொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்து அவற்களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசையாக அறுபத முரன்று, நிரைமலர்த் தாது கண்மூச விண்டுதிர்ந்து
வேரிகளெங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(4)
வண்டணை கொன்றை வன்னியுமத்த மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர், விடையினர், பூதம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும் முழவப்
பண்திகழ்வாகப் பாடியொர் வேதம் பயில்வர், முன்பாய் புனற்கங்கையைச் சடைமேல்
வெண்பிறைசூடி உமையவளோடும் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(5)
சடையினர், மேனி நீறதுபூசித் தக்கைகொள் பொக்கணம் இட்டுடனாகக்
கடைதொறும் வந்து பலியதுகொண்டு, கண்டவர்மனம் அவை கவர்ந்தழகாகப்
படையது ஏந்திப், பைங்கயல்கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்தருள் செய்து
விடையொடுபூதம் சூழ்தரச் சென்று வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(6)
கரைபொரு கடலில் திரையது மோதக் கங்குல் வந்தேறிய சங்கமும்இப்பி
உரையுடை முத்த மணலிடை வைகி, ஓங்குவான் இருளறத் துரப்ப, எண்திசையும்
புரைமலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலங்கொள் ஆகுதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(7)
வல்லி நுண்ணிடையாள் உமையவள் தன்னை மறுகிடவரு மதகளிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்தங்குரித்து அவள்வெருவல் கெடுத்தவர், விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லறம்உரைத்து ஞானமோடிருப்ப, நலிந்திடலுற்று வந்த அக்கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர், விரும்பி வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(8)
பாங்கிலா அரக்கன் கயிலை அன்றெடுப்பப் பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கியவிரலால் ஊன்றி அன்றவற்கே ஒளிதிகழ் வாளது கொடுத்தழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம் கொன்றையும் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(9)
ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண அரியொடு பிரமனும் அளப்பதற்காகிச்
சேறிடைத்திகழ் வானத்திடை புக்கும் செலஅறத் தவிர்ந்தனர், எழிலுடைத் திகழ்வெண்
நீறுடைக் கோலமேனியர், நெற்றிக் கண்ணினர், விண்ணவர் கைதொழுதேத்த
வேறெமைஆள விரும்பிய விகிர்தர், வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(10)
பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் அறவுரை விட்டு, அழகாக
ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன்சூழக், கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர், வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
(11)
விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான், வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இவ்வாய்மொழி நலமிகு பத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில வல்லோர்கள்
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வியனுலகாண்டு வீற்றிருப்பவர் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page