சீகாழி – சம்பந்தர் தேவாரம் (19):

<– சீகாழி

(1)
பூமகனூர், புத்தேளுக்கிறைவனூர், குறைவிலாப் புகலி, பூமேல்
மாமகளூர் வெங்குரு, நற்தோணிபுரம், பூந்தராய், வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரம், சீர்ப்புறவம், நிறைபுகழ்ச் சண்பை, காழி, கொச்சை
காமனைமுன் காய்ந்த நுதல்கண்ணவன் ஊர், கழுமலம் நாம் கருதும் ஊரே
(2)
கருத்துடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த் தோணிபுரம், கனகமாட
உருத்திகழ் வெங்குருப் புகலி, ஓங்கு தராய், உலகாரும் கொச்சை, காழி
திருத்திகழும் சிரபுரம், தேவேந்திரனூர், செங்கமலத்தயனூர், தெய்வத்
தருத்திகழும் பொழில் புறவம், சண்பை, சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே
(3)
ஊர் மதியைக் கதுவ உயர்மதில் சண்பை, ஒளிமருவு காழி, கொச்சை
கார்மலியும் பொழில் புடைசூழ் கழுமலம், மெய்த் தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர்மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயனூர், பூங்கற்பத்
தார் மருவும் இந்திரனூர், புகலி, வெங்குருக் கங்கை தரித்தோன் ஊரே
(4)
தரித்த மறையாளர்மிகு வெங்குருச், சீர்த் தோணிபுரம், தரியார் இஞ்சி
எரித்தவன் சேர் கழுமலமே, கொச்சை, பூந்தராய், புகலி, இமையோர் கோனூர்
தெரித்த புகழ்ச் சிரபுரம், சீர்திகழ் காழி, சண்பை, செழு மறைகளெல்லாம்
விரித்த புகழ்ப் புறவம், விரைக் கமலத்தோன் ஊர், உலகில் விளங்குமூரே
(5)
விளங்கயனூர், பூந்தராய், மிகுசண்பை, வேணுபுரம், மேகம் ஏய்க்கும்
இளங்கமுகம் பொழில் தோணிபுரம், காழி, எழில் புகலி, புறவம், ஏரார்
வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச்சிரபுரம், வன்னஞ்சம் உண்டு
களங்கமலி களத்தவன் சீர்க் கழுமலம், காமன் உடலம் காய்ந்தோன் ஊரே
(6)
காய்ந்து வரு காலனை அன்றுதைத்தவன் ஊர் கழுமலம், மாத்தோணிபுரம், சீர்
ஏய்ந்த வெங்குருப் புகலி, இந்திரனூர், இருங்கமலத்தயனூர், இன்பம்
வாய்ந்த புறவம், திகழும் சிரபுரம், பூந்தராய், கொச்சை, காழி, சண்பை
சேந்தனை முன் பயந்துலகில் தேவர்கள்தம் பகை கெடுத்தோன் திகழுமூரே
(7)
திகழ் மாடமலி சண்பை, பூந்தராய், பிரமனூர், காழி, தேசார்
மிகு தோணிபுரம், திகழும் வேணுபுரம், வயம் கொச்சை, புறவம், விண்ணோர்
புகழ் புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங்குரு, வெம்போர் மகிடற் செற்று
நிகழ்நீலி நின்மலன்தன் அடிஇணைகள் பணிந்துலகில் நின்றவூரே
(8)
நின்றமதில் சூழ்தரு வெங்குருத் தோணிபுரம், நிகழும் வேணு, மன்றில்
ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர் புறவம், மோடி
சென்று புறம் காக்கும்ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி, தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம், பூதங்கள் தாம் காக்க மிக்கவூரே
(9)
மிக்க கமலத்தயனூர், விளங்கு புறவம், சண்பை, காழி, கொச்சை
தொக்க பொழில் கழுமலம், தூத்தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் சேரூர்
மைக்கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு, வல்லரக்கன் திண்தோள்
ஒக்க இருபது முடிகள் ஒருபதும் ஈடழித்துகந்த எம்மான் ஊரே
(10)
எம்மான் சேர் வெங்குருச் சீர்ச் சிலம்பனூர், கழுமலம், நற்புகலி, என்றும்
பொய் மாண்பில்ஓர் புறவம், கொச்சை, புரந்தரனூர், நற்தோணிபுரம், போர்க்
கைம்மாவை உரிசெய்தோன் காழி, அயனூர், தராய், சண்பை, காரின்
மெய்ம்மால் பூமகன் உணராவகை தழலாய் விளங்கிய எம் இறைவனூரே
(11)
இறைவன்அமர் சண்பை, எழில் புறவம், அயனூர், இமையோர்க்கதிபன் சேரூர்
குறைவில் புகழ்ப் புகலி, வெங்குருத் தோணிபுரம், குணமார் பூந்தராய், நீர்ச்
சிறைமலி நற்சிரபுரம், சீர்க்காழி, வளர் கொச்சை, கழுமலம், தேசின்றிப்
பறி தலையோடமண் கையர் சாக்கியர்கள் பரிசறியா அம்மான் ஊரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page