சீகாழி – சம்பந்தர் தேவாரம் (1)

<– சீகாழி

(1)
தோடுடைய செவியன் விடையேறிஓர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(2)
முற்றல்ஆமை இளநாகமோடேன முளைக் கொம்பவை பூண்டு
வற்றலோடு கலனாப் பலி தேர்ந்தெனதுள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(3)
நீர்பரந்த நிமிர்புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்த இன வெள்வளைசோர என்உள்ளம் கவர் கள்வன்
ஊர்பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இதுஎன்னப்
பேர்பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(4)
விண்மகிழ்ந்த மதில் எய்ததும்அன்றி, விளங்கு தலையோட்டில்
உண்மகிழ்ந்து பலிதேரிய வந்தெனதுள்ளம் கவர் கள்வன்
மண்மகிழ்ந்த அரவம் மலர்க்கொன்றை மலிந்த வரைமார்பில்
பெண்மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(5)
ஒருமை பெண்மை உடையன், சடையன், விடையூரும் இவனென்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்தெனதுள்ளம் கவர் கள்வன்
கருமைபெற்ற கடல்கொள்ள மிதந்ததொர் காலம் இதுஎன்னப்
பெருமைபெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(6)
மறைகலந்த ஒலி பாடலோடு ஆடலராகி, மழுவேந்தி
இறைகலந்த இன வெள்வளை சோர என் உள்ளங்கவர் கள்வன்
கறைகலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர்சிந்தப்
பிறைகலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(7)
சடைமுயங்கு புனலன், அனலன், எரிவீசிச் சதிர்வெய்த
உடைமுயங்கும் அரவோடுழி தந்தெனதுள்ளம் கவர் கள்வன்
கடல்முயங்கு கழிசூழ் குளிர்கானலம் பொன்னஞ் சிறகன்னம்
பெடைமுயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்ற
(8)
வியர்இலங்கு வரைஉந்திய தோள்களை, வீரம் விளைவித்த
உயர்இலங்கை அரையன் வலி செற்றெனதுள்ளம் கவர் கள்வன்
துயரிலங்கும் உலகில் பலஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(9)
தாணுதல் செய்து இறை காணிய மாலொடு, தண் தாமரையானும்
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனதுள்ளம் கவர் கள்வன்
வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(10)
புத்தரோடு பொறியில் சமணும் புறம்கூற நெறிநில்லா
ஒத்தசொல்ல உலகம் பலி தேர்ந்தெனதுள்ளம் கவர் கள்வன்
மத்தயானை மறுக அவ்வுரி போர்த்ததோர் மாயம் இதுஎன்னப்
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
(11)
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை
ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page