சீகாழி – சம்பந்தர் தேவாரம் (18):

(1)
விளங்கியசீர்ப் பிரமனூர், வேணுபுரம், புகலி, வெங்குரு, மேற்சோலை
வளங்கவரும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வண் புறவம், மண்மேல்
களங்கமில்ஊர் சண்பை, கமழ் காழி, வயங்கொச்சை, கழுமலம் என்றின்ன
இளங்குமரன் தன்னைப் பெற்றிமையவர் தம் பகைஎரிவித்த இறைவன்ஊரே
(2)
திருவளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரனூர், அயனூர், தெய்வத்
தருவளரும் பொழில் புறவம், சிலம்பனூர், காழி, தகு சண்பை, ஒண்பா
உருவளர் வெங்குருப் புகலி, ஓங்கு தராய், தோணிபுரம், உயர்ந்த தேவர்
வெருவ வளர் கடல் விடமதுண்டு அணிகொள் கண்டத்தோன் விரும்பும்ஊரே
(3)
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் வாழூர்
ஏய்ந்த புறவம், திகழும் சண்பை, எழில் காழி, இறை கொச்சையம், பொன்
வேய்ந்த மதில் கழுமலம், விண்ணோர் பணிய மிக்க அயனூர், அமரர் கோனூர்
ஆய்ந்த கலையார் புகலி, வெங்குருஅது அரன்நாளும் அமரும்ஊரே
(4)
மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு, மாப்புகலி, தராய், தோணிபுரம்,வான்
சேமமதில் புடை திகழும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரனூர், சீர்ப்
பூமகனூர், பொலிவுடைய புறவம், விறல் சிலம்பனூர், காழி, சண்பை
பாமருவு கலையெட்டெட்டு உணர்ந்தவற்றின் பயன் நுகர்வோர் பரவும் ஊரே
(5)
தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க்காழி, வயங்கொச்சை, தயங்கு பூமேல்
விரைச்சேரும் கழுமலம், மெய்யுணர்ந்தயனூர், விண்ணவர் தம் கோனூர், வென்றித்
திரைச்சேரும் புனல்புகலி, வெங்குருச் செல்வம் பெருகு தோணிபுரம்; சீர்
உரைச்சேர் பூந்தராய், சிலம்பனூர், புறவம், உலகத்தில் உயர்ந்த ஊரே
(6)
புண்டரிகத்தார் வயல்சூழ் புறவம், மிகு சிரபுரம், பூங்காழி, சண்பை
எண்திசையோர் இறைஞ்சிய வெங்குருப் புகலி, பூந்தராய், தோணிபுரம்;சீர்
வண்டமரும் பொழில் மல்கு கழுமலம், நற்கொச்சை, வானவர் தங்கோனூர்
அண்டயனூர், இவையென்பர் அருங்கூற்றை உதைத்துகந்த அப்பன்ஊரே
(7)
வண்மை வளர் வரத்தயனூர், வானவர்தம் கோனூர், வண்புகலி, இஞ்சி
வெண்மதி சேர் வெங்குரு, மிக்கோர் இறைஞ்சு சண்பை, வியன் காழி, கொச்சை
கண் மகிழும் கழுமலம், கற்றோர் புகழும் தோணிபுரம், பூந்தராய், சீர்ப்
பண் மலியும் சிரபுரம், பார்புகழ் புறவம், பால் வண்ணன் பயிலும் ஊரே
(8)
மோடி புறங்காக்கும் ஊர், புறவம், சீர்ச் சிலம்பனூர், காழி மூதூர்
நீடியலும் சண்பை, கழுமலம், கொச்சை, வேணுபுரம், கமலநீடு
கூடியவன் ஊர், வளர் வெங்குருப் புகலி, தராய், தோணிபுரம், கூடப் போர்
தேடிஉழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலைச் சிலையன் ஊரே
(9)
இரக்கமுடை இறையவன் ஊர், தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனல் புறவம், நின்ற தவத்தயனூர், சீர்த்தேவர் கோனூர்
வரக் கரவாப் புகலி, வெங்குரு, மாசிலாச் சண்பை, காழி, கொச்சை
அரக்கன் விறல்அழித்தருளி கழுமலம், அந்தணர் வேதம்அறாத ஊரே
(10)
மேலோதும் கழுமலம், மெய்த் தவம் வளரும் கொச்சை, இந்திரனூர், மெய்மை
நூலோதும் அயன் தனூர், நுண்ணறிவார் குருப்புகலி, தராய், தூநீர்மேல்
சேலோடு தோணிபுரம், திகழ் புறவம், சிலம்பனூர், செருச் செய்தன்று
மாலோடும் அயன்அறியான் வண்காழி, சண்பை, மண்ணோர் வாழ்த்தும் ஊரே
(11)
ஆக்கமர் சீரூர் சண்பை, காழி, அமர் கொச்சை, கழுமலம், அன்பான்ஊர்
ஒக்கமுடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண் புறவம், நண்பார்
பூக்கமலத்தோன் மகிழ்ஊர், புரந்தரனூர், புகலி, வெங்குருவும் என்பர்
சாக்கியரோடமண் கையர் தாமறியா வகை நின்றான் தங்கும்ஊரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page