சீகாழி – சம்பந்தர் தேவாரம் (16):

(1)
சங்கமரு முன்கை மடமாதை ஒருபாலுடன் விரும்பி
அங்கமுடன் மேலுற அணிந்து பிணிதீர அருள்செய்யும்
எங்கள்பெருமான் இடம் எனத்தகு, முனைக்கடலின் முத்தம்
துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுரமாமே
(2)
சல்லரி யாழ்முழவ மொந்தைகுழல் தாளமதியம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரி கையேந்தி நடமாடு சடைஅண்ணல் இடமென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுரமாமே
(3)
வண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்
பண்டரவு தன்அரையில் ஆர்த்த பரமேட்டி, பழி தீரக்
கண்டரவ ஒண்கடலின் நஞ்சம்அமுதுண்ட கடவுள் ஊர்
தொண்டர்அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரமாமே
(4)
கொல்லைவிடை ஏறுடைய கோவணன், நாஅணவு மாலை
ஒல்லையுடையான், அடையலார் அரணம் ஒள்ளழல் விளைத்த
வில்லை உடையான் மிகவிரும்பு பதி, மேவி வளர் தொண்டர்
சொல்லை அடைவாக இடர் தீர்த்தருள்செய் தோணிபுரமாமே
(5)
தேயுமதியம் சடைஇலங்கிட, விலங்கல் மலிகானில்
காயும்அடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன், நினைப்பார்
தாயென நிறைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூய மறையாளர் முறையோதி நிறை தோணிபுரமாமே
(6)
பற்றலர்தம் முப்புரமெரித்து, அடி பணிந்தவர்கள் மேலைக்
குற்றம் ஒழித்தருளும் கொள்கையினன், வெள்ளின் முதுகானில்
பற்றவன், இசைக்கிளவி பாரிடமதேத்த நடமாடும்
துற்ற சடைஅத்தன் உறைகின்ற பதி தோணிபுரமாமே
(7)
பண்ணமரு நான்மறையர், நூல்முறை பயின்ற திருமார்பில்
பெண்ணமரு மேனியினர், தம்பெருமை பேசும்அடியார் மெய்த்
திண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தல் உடையான்ஊர்
துண்ணென விரும்பு சரியைத் தொழிலர் தோணிபுரமாமே
(8)
தென்திசை இலங்கைஅரையன் திசைகள் வீரம் விளைவித்து
வென்றிசை புயங்களை அடர்த்தருளும் வித்தகன் இடம், சீர்
ஒன்றிசை இயற்கிளவி பாட, மயிலாட, வளர்சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுரமாமே
(9)
நாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி
ஆற்றலதனால் மிக அளப்பரிய வண்ணம் எரியாகி
ஊற்றமிகு கீழுலகு மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளும் அரியான், உறைவு தோணிபுரமாமே
(10)
மூடு துவர்ஆடையினர், வேடநிலை காட்டும் அமணாதர்
கேடுபல சொல்லிடுவர் அம்மொழி கெடுத்தடைவினான், அக்
காடு பதியாக நடமாடி, மட மாதொடு இருகாதில்
தோடுகுழை பெய்தவர் தமக்கு, உறைவு தோணிபுரமாமே
(11)
துஞ்சிருளில் நின்று நடமாடி மிகு தோணிபுர மேய
மஞ்சனை, வணங்கு திருஞானசம்பந்தன் சொல்மாலை
தஞ்சமென நின்றிசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம்
வஞ்சமிலர், நெஞ்சிருளும் நீங்கி அருள்பெற்று வளர்வாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page