(1)
எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
வந்து துதி செய்ய, வளர் தூபமொடு தீபமலி வாய்மை அதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பை நகரே
(2)
அங்கம்விரி துத்திஅரவாமை விரவாரம்அமர் மார்பிலழகன்
பங்கய முகத்திரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான்
பொங்கு பரவைத் திரைகொணர்ந்து பவளத்திரள் பொலிந்த வயலே
சங்குபுரி இப்பி தரளத்திரள் பிறங்கொளி கொள் சண்பைநகரே
(3)
போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி ஏழையிள மாதினொடு இருந்த பதிதான்
வாழைவளர் ஞாழல்மகிழ் மன்னுபுனை துன்னுபொழில் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென உந்துதகு சண்பை நகரே
(4)
கொட்டமுழ இட்டஅடி வட்டணைகள் கட்டநடமாடி குலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவு பதிதான்
வட்டமதி தட்டுபொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்டகலை எட்டு மருவெட்டும் வளர் தத்தைபயில் சண்பை நகரே
(5)
பணங்கெழுவு பாடலினொடு ஆடல்பிரியாத பரமேட்டி, பகவன்
அணங்கெழுவு பாகமுடை ஆகமுடை அன்பர் பெருமானதிடமாம்
இணங்கெழுவி ஆடுகொடி மாடமதில் நீடுவிரையார் புறவெலாம்
தணங்கெழுவி ஏடலர்கொள் தாமரையில் அன்னம்வளர் சண்பைநகரே
(6)
பாலனுயிர் மேலணவு காலன்உயிர் பாறஉதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி ஆயிழை தனோடும் அமர்வெய்தும் இடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர் கிண்டி நறவுண்டு இசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பை நகரே
(7)
விண்பொய் அதனால் மழை விழாதொழியினும், விளைவு தான் மிகவுடை
மண்பொய் அதனால் வளமிலாதொழியினும் தமது வண்மை வழுவார்
உண்பகர வாருலகில் ஊழிபல தோறு நிலையான பதிதான்
சண்பைநகர் ஈசனடி தாழும்அடியார் தமது தன்மைஅதுவே
(8)
வரைக்குல மகட்கொரு மறுக்கம் வருவித்த, மதியில் வலியுடை
அரக்கனதுரக்கர சிரத்துற அடர்த்தருள் புரிந்த அழகன்
இருக்கைய தருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
தருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே
(9)
நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேர்உருவமாம்
மாலு மலரானும் அறியாமைவளர் தீயுருவமான வரதன்
சேலுமின வேலுமன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாம்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே
(10)
போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாதவகை உண்டுபலபொய்
ஓதியவர் கொண்டு செய்வதொன்றுமிலை, நன்றதுணர்வீர் உரைமினோ
ஆதிஎமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான்
சாதிமணி தெண்திரை கொணர்ந்து வயல்புக எறிகொள் சண்பைநகரே
(11)
வாரின்மலி கொங்கைஉமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமரும் ஊர்
சாரின்முரல் தென்கடல் விசும்புற முழங்கொலி கொள் சண்பைநகர்மேல்
பாரின் மலிகின்றபுகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...