(1)
முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
பன்னிய ஒருத்தர் பழவூர் வினவின், ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன்வணங்கும்
சென்னியர் விருப்புறு திருப்புகலியாமே
(2)
வண்திரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
பண்டெரிகை ஆடு பரமன் பதியது என்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்திரை கடற்பொலி திருப்புகலியாமே
(3)
பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவும் அந்தணன் விருப்பிடமதென்பர்
பூவணவு சோலையிருள் மாலைஎதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலியாமே
(4)
மைதவழு மாமிடறன் மாநடமதாடி
கைவளையினாளொடு கலந்தபதி என்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரர்கள் கூடித்
தெய்வமது இணக்குறு திருப்புகலியாமே
(5)
முன்னம்இரு மூன்றுசமயங்கள் அவையாகிப்
பின்னைஅருள் செய்த பிறையாளன் உறைகோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின்ஒளி காட்டச்
செந்நெல் வயலார்தரு திருப்புகலியாமே
(6)
வங்கமலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்திருக்குமிடம் என்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலியாமே
(7)
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவையாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தன்இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படியார இசை பாடிச்
செல்வ மறையோர்உறை திருப்புகலியாமே
(8)
பரப்புறு புகழ்ப் பெருமையாளன், வரை தன்னால்
அரக்கனை அடர்த்தருளும் அண்ணல்இடம் என்பர்
நெருக்குறு கடல்திரைகள் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலியாமே
(9)
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரியாகி இரு பாலும் அடிபேணித்
தேட உறையும்நகர் திருப்புகலியாமே
(10)
கற்றமணர் உற்றுலவு தேரர்உரை செய்த
குற்றமொழி கொள்கையதிலாத பெருமான்ஊர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர் புலனைந்தும்
செற்றவர் விருப்புறு திருப்புகலியாமே
(11)
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்த முதலாகி நடுவாய பெருமானைப்
பந்தனுரை செய் தமிழ்கள் பத்தும் இசைகூர
வந்தவனம் ஏத்துமவர் வானம்உடையாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...