(1)
பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடையவன்இறை
இறையணி வளையிணை முலையவள் இணைவனதெழிலுடை இடவகை
கறையணி பொழில்நிறை வயலணி கழுமலம் அமர்கனல் உருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழல் மருவுமே
(2)
பிணிபடுகடல் பிறவிகள்அறல் எளிதுளதது பெருகியதிரை
அணிபடு கழுமலம் இனிதமர் அனலுருவினன், அவிர் சடைமிசை
தணிபடு கதிர்வளர் இளமதி புனைவனை, உமை தலைவனை, நிற
மணிபடு கறைமிடறனை, நலம் மலிகழல் இணைதொழல் மருவுமே
(3)
வரியுறு புலியதள் உடையினன், வளர்பிறை ஒளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடை, விரைபுரை பொழில் விழவொலிமலி கழுமலம்அமர்
எரியுறுநிற இறைவனதடி இரவொடு பகல் பரவுவர் தமது
தெரியுறு வினைசெறி கதிர்முனை இருள்கெட நனி நினைவெய்தும்அதே
(4)
வினைகெட மன நினைவது முடிகெனில் நனி தொழுதெழு, குலமதி
புனைகொடி இடைபொருள் தருபடு களிறினது உரிபுதை உடலினன்
மனைகுட வயிறுடையன சில வருகுறள் படைஉடையவன், மலி
கனைகடல்அடை கழுமலம்அமர் கதிர் மதியினன் அதிர் கழல்களே
(5)
தலைமதி புனல்விட அரவிவை தலைமையதொரு சடை இடையுடன்
நிலைமருவ ஓரிடம் அருளினன், நிழல் மழுவினொடழல் கணையினன்
மலைமருவிய சிலைதனில் மதில் எரியுண மன மருவினன், நல
கலை மருவிய புறவணிதரு கழுமலம் இனிதமர் தலைவனே
(6)
வரைபொருதிழி அருவிகள்பல பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய கழுமலம் அமர்கனல் உருவினன்
அரைபொரு புலியதள் உடையினன் அடியிணை தொழவரு வினையெனும்
உரைபொடி படஉறு துயர்கெட உயருலகெய்தல் ஒரு தலைமையே
(7)
முதிருறி கதிர்வளர் இளமதி சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை உடைபுலி அதள்இடை இருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர்மழு மலிபடை
அதிருறு கழல் அடிகளதடி தொழும் அறிவலதறி அறியமே
(8)
கடலென நிறநெடு முடியவன் அடுதிறல் தெறஅடி சரணென
அடல்நிறை படை அருளியபுகழ் அரவரையினன், அணிகிளர் பிறை
விடநிறை மிடறுடையவன், விரி சடையவன், விடையுடையவன், உமை
உடனுறை பதிகடல் மறுகுடை உயர்கழுமல வியன்நகரதே
(9)
கொழுமலர் உறைபதி உடையவன், நெடியவன்என இவர்களும்அவன்
விழுமையை அளவறிகிலர் இறை விரைபுணர் பொழிலணி விழஅமர்
கழுமலம் அமர்கனல் உருவினன், அடியிணை தொழுமவர் அருவினை
எழுமையும் இலநில வகைதனில், எளிதிமையவர் வியன்உலகமே
(10)
அமைவன துவர்இழுகிய துகில்அணியுடையினர், அமண்உருவர்கள்
சமையமும் ஒருபொருள் எனும்அவை சலநெறியன அறவுரைகளும்
இமையவர் தொழு கழுமலம்அமர் இறைவனதடி பரவுவர்தமை
நமையல வினைநலன் அடைதலில் உயர்நெறிநனி நணுகுவர்களே
(11)
பெருகிய தமிழ்விரகினன் மலி பெயரவன் உறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை கழுமலம் உறைவிடம் எனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழியன ஒருபதுமுடன்
மருவிய மனமுடையவர் மதி உடையவர் விதியுடையவர்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...