சீகாழி – சம்பந்தர் தேவாரம் (12):

(1)
இயலிசை எனும் பொருளின் திறமாம்
புயல்அன மிடறுடைப் புண்ணியனே
கயல்அன வரிநெடும் கண்ணியொடும்
அயல்உலகடி தொழ அமர்ந்தவனே
கலன்ஆவது வெண்தலை, கடிபொழில் புகலிதன்னுள்
நிலன் நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே
(2)
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
இலையுறு மலர்கள் கொண்டேத்துதும் யாம்
மலையினில் அரிவையை வெருவ வன்தோல்
அலைவரு மதகரி உரித்தவனே
இமையோர்கள் நின்தாள் தொழ, எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை, உயர் திருவடி இணையே
(3)
பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்தில்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையே அடியார்தொழ, நெடுமதில் புகலிந்நகர்
தனையேஇட மேவினை, தவநெறி அருள்எமக்கே
(4)
நிழல்திகழ் மழுவினை, யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல் மதிசூடினை, முருகமர் பொழிற்புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
(5)
கருமையின் ஒளிர்கடல் நஞ்சம் உண்ட
உரிமையின் உலகுயிர் அளித்த நிந்தன்
பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்
அருமையில் அளப்பரிதாயவனே
அரவேர் இடையாளொடும் அலைகடல் மலிபுகலிப்
பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே
(6)
அடையரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதில் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தா பரமா, நின்னை விண்ணவர் தொழப் புகலித்
தகுவாய் மடமாதொடும் தாள் பணிந்தவர் தமக்கே
(7)
அடியவர் தொழுதெழ அமரர்ஏத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகலல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியா புனிதா, புகர்ஏற்றினை, புகலிந்நகர்
நண்ணினாய், கழல்ஏத்திட நண்ணகிலா வினையே
(8)
இரவொடு பகலதாம் எம்மான்உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே
அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை
இனமார்தரு தோளடர்த்திருந்தனை புகலியுளே
(9)
உருகிட உவகை தந்துடலின் உள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்
உயர்ந்தாய், இனி நீஎனை ஒண்மலரடி இணைக்கீழ்
வயந்தாங்குற நல்கிடு மதிற் புகலிமனே
(10)
கையினில் உண்பவர், கணிகை நோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே
வியந்தாய் வெள்ளேற்றினை, விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே
(11)
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவர் அடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page