சீகாழி – சம்பந்தர் தேவாரம் (11):

<– சீகாழி

(1)
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்றதாகிய நம்பன் தானே
(2)
புள்ளினம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்னெறி
மூலமாய முதலவன் தானே
(3)
வேந்தராய் உலகாள விருப்புறின்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதியால் நினைந்தேத்தி உள்கிடச்
சாதியா வினையான தானே
(4)
பூசுரர் தொழுதேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்துவார் சடைஎம் இறையே
(5)
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல் வினைஓட வீடுசெய்
எந்தையாய எம்ஈசன் தானே
(6)
பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம், நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே
(7)
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவமாயின தீரப் பணித்திடும்
சேவதேறிய செல்வன் தானே
(8)
போதகத்துரி போர்த்தவன் பூந்தராய்
காதலித்தான், கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞகனே
(9)
மத்தம் ஆன இருவர் மருவொணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆளதாக அடைந்துய்ம்மின், நும்வினை
மாளுமாறருள் செய்யும் தானே
(10)
பொருத்தமில் சமண் சாக்கியப் பொய்கடிந்து
இருத்தல் செய்தபிரான், இமையோர்தொழப்
பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை
ஏந்து மான்மறி எம்இறையே
(11)
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம்இல் எம் அடிகளை !ஞானசம்
பந்தன் மாலை கொண்டேத்தி வாழும், நும்
பந்தமார் வினை பாறிடுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page