சீகாழி – சம்பந்தர் தேவாரம் (10):

<– சீகாழி

(1)
வரமதே கொளாதுரமதே செயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்து
அரன்நாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே
(2)
சேணுலாமதில் வேணு மண்ணுளோர் காண மன்றலார் வேணுநற்புரத்
தாணுவின்கழல் பேணுகின்றவர் ஆணிஒத்தவரே
(3)
அகலமார்தரைப் புகலு நான்மறைக்கிகலியோர்கள் வாழ் புகலிமாநகர்ப்
பகல்செய்வோன் எதிர்ச் சகலசேகரன் அகிலநாயகனே
(4)
துங்கமாகரி பங்கமாஅடும் செங்கையான்திகழ் வெங்குருத் திகழ்
அங்கணான்அடி தங்கையால்தொழத் தங்குமோ வினையே
(5)
காணிஒண்பொருள் கற்றவர்க்கீகை உடைமையோரவர் காதல்செய்யுநற்
தோணி வண்புரத் தாணிஎன்பவர் தூமதியினரே
(6)
ஏந்தராஎதிர் வாய்ந்த நுண்ணிடைப் பூந்தண்ஓதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேல் சேர்ந்திரா வினையே
(7)
சுரபுரத்தினைத் துயர்செய் தாரகன் துஞ்சவெஞ்சினக் காளியைத் தரும்
சிரபுரத்துளான் என்ன வல்லவர் சித்திபெற்றவரே
(8)
உறவுமாகி அற்றவர்களுக்குமா நெதிகொடுத்துநீள் புவிஇலங்குசீர்ப்
புறவமா நகர்க்கிறைவனே எனத் தெறகிலா வினையே
(9)
பண்புசேர்இலங்கைக்கு நாதனன் முடிகள் பத்தையும் கெடநெரித்தவன்
சண்பைஆதியைத் தொழுமவர்களைச் சாதியா வினையே
(10)
ஆழிஅங்கையில் கொண்ட மாலயன் அறிவொணாததோர் வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுள்நாமமே கற்றல் நற்தவமே
(11)
விச்சைஒன்றிலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சை மாநகர்க்கன்பு செய்பவர் குணங்கள் கூறுமினே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page