சிவபுரம் – சம்பந்தர் தேவாரம் (2):

<– சிவபுரம்

(1)
இன்குரலிசை கெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன் நகர்
பொன்கரை பொரு பழங்காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே
(2)
அன்றடல் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட உதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் எயிற்று வெண்பன்றி முன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே
(3)
மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க உரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் அரிசிலி அதனயலே
சிலைமல்கு மதிளணி சிவபுரமே
(4)
மண்புனல் அனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன் நகர்
பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச்
செண்பக மலர்பொழில் சிவபுரமே
(5)
வீறு நன்குடையவள் மேனி பாகம்
கூறு நன்குடையவன் குளிர்நகர் தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண்டு எழுதரு சிவபுரமே
(6)
மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறதுவாக்கிய நிமலன் நகர்
நாறுடை நடுபவர் உழவரொடும்
சேறுடை வயலணி சிவபுரமே
(7)
ஆவில் ஐந்தமர்ந்தவன், அரிவையொடு
மேவி நன்கிருந்ததொர் வியன் நகர்தான்
பூவில் வண்டமர் தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே
(8)
எழில்மலை எடுத்தவல் இராவணன் தன்
முழுவலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து
செழுமுகில் அடுக்கும்வண் சிவபுரமே
(9)
சங்களவிய கையன், சதுர்முகனும்
அங்களவு அறிவரியவன் நகர் தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே
(10)
மண்டையில் குண்டிகை மாசு தரும்
மிண்டரை விலக்கிய விமலன் நகர்
பண்டமர் தரு பழங்காவிரியின்
தெண்திரை பொருதெழு சிவபுரமே
(11)
சிவனுறை தரு சிவபுர நகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page