(1)
கலைமலி அகலல்குல் அரிவைதன் உருவினன்
முலைமலி தருதிரு உருவமதுடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினை இருமையும் இடர் கெடுமே
(2)
படரொளி சடையினன், விடையினன், மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்
இடர்கெடும், உயர்கதி பெறுவது திடனே
(3)
வரைதிரி தரவர அகடழல் எழவரு
நுரைதரு கடல்விட நுகர்பவன் எழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரும் அடியவர் உயர் கதியினரே
(4)
துணிவுடையவர், சுடு பொடியினர், உடலடு
பிணியடைவிலர், பிறவியும்அற விசிறுவர்
தணிவுடை அவர்பயில் சிவபுரம் மருவிய
மணிமிடறனது அடியிணை தொழும் அவரே
(5)
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்
நிறையவன், உமையவள் மகிழ்நட நவில்பவன்
இறையவன், இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென உடையவன் எமை உடையவனே
(6)
முதிர்சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழல் ஒலிசெய வருநட நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி அணைபதி
சதிர்பெறும் உளமுடையவர் சிவபுரமே
(7)
வடிவுடை மலைமகள் சலமகள் உடனமர்
பொடிபடும் உழையதள் பொலிதிரு உருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினையிலரே
(8)
கரமிருபது முடி ஒருபதும் உடையவன்
உரநெரி தரவரை அடர்வு செய்தவன் உறை
பரனென அடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதனம் உயர்கதி அதுவே
(9)
அன்றியல் உருவுகொள் அரியயன் எனுமவர்
சென்றளவிடல் அரியவன் உறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடும் அவர்துயர்
ஒன்றிலர் புகழொடும் உடையர் இவ்வுலகே
(10)
புத்தரொடமணர்கள் அறவுரை புறவுரை
வித்தகம் ஒழிகில விடையுடை அடிகள்தம்
இத்தவ முயல்வுறில் இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே
(11)
புந்தியர் மறைநவில் புகலிமன் !ஞானசம்
பந்தன் தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர் வினை
சிந்திமுன் உறவுயர் கதி பெறுவர்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...