(1)
வானவன் காண், வானவர்க்கு மேலானான் காண்
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண், ஆனைந்தும் ஆடினான் காண்
ஐயன் காண், கையில்அனல் ஏந்தியாடும்
கானவன் காண், கானவனுக்கருள் செய்தான் காண்
கருதுவார் இதயத்துக் கமலத்தூறும்
தேனவன் காண், சென்றடையாச் செல்வன் தான் காண்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே
(2)
நக்கன் காண், நக்கரவம் அரையிலார்த்த
நாதன் காண், பூத கணமாட ஆடும்
சொக்கன் காண், கொக்கிறகு சூடினான் காண்
துடியிடையாள் துணைமுலைக்குச் சேர்வதாகும்
பொக்கன் காண், பொக்கணத்த வெண்ணீற்றான் காண்
புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன் காண், செக்கரது திகழு மேனிச்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே
(3)
வம்பின் மலர்க்குழல் உமையாள் மணவாளன் காண்
மலரவன்மால் காண்பரிய மைந்தன் தான் காண்
கம்பமதக் கரிபிளிற உரி செய்தோன் காண்
கடல்நஞ்சம் உண்டிருண்ட கண்டத்தான் காண்
அம்பர்நகர்ப் பெருங்கோயில் அமர்கின்றான் காண்
அயவந்தி உள்ளான் காண், ஐயாறன் காண்
செம்பொன்எனத் திகழ்கின்ற உருவத்தான் காண்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே
(4)
பித்தன் காண், தக்கன் தன் வேள்வியெல்லாம்
பீடழியச் சாடி அருள்கள் செய்த
முத்தன் காண், முத்தீயும் ஆயினான் காண்
முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன் காண், புத்தூரில் அமர்ந்தான் தான் காண்
அரிசில் பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன் காண், சித்தீச்சரத்தான் தான் காண்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே
(5)
தூயவன் காண், நீறு துதைந்த மேனி
துளங்கும் பளிங்கனைய சோதியான் காண்
தீயவன் காண், தீயவுணர் புரம் செற்றான் காண்
சிறுமான் கொள் செங்கையெம் பெருமான்தான் காண்
ஆயவன் காண், ஆரூரில் அம்மான் தான் காண்
அடியார்கட்காரமுதம் ஆயினான் காண்
சேயவன் காண், சேமநெறி ஆயினான் காண்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே
(6)
பாரவன் காண், பாரதனில் பயிரானான் காண்
பயிர்வளர்க்கும் துளியவன் காண், துளியில் நின்ற
நீரவன் காண், நீர்சடை மேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற்றோங்கும்
பேரவன் காண், பிறைஎயிற்று வெள்ளைப் பன்றிப்
பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும்
சீரவன் காண், சீருடைய தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே
(7)
வெய்யவன் காண், வெய்ய கனலேந்தினான் காண்
வியன் கெடில வீரட்டம் மேவினான் காண்
மெய்யவன் காண், பொய்யர் மனம் விரவாதான் காண்
வீணையோடு இசைந்துமிகு பாடல் மிக்க
கையவன் காண், கையில் மழுவேந்தினான் காண்
காமனங்கம் பொடிவிழித்த கண்ணினான் காண்
செய்யவன் காண், செய்யவளை மாலுக்கீந்த
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே
(8)
…
(9)
…
(10)
கலையாரு நூலங்கம் ஆயினான் காண்
கலைபயிலும் கருத்தன் காண், திருத்தமாகி
மலையாகி மறிகடலேழ் சூழ்ந்து நின்ற
மண்ணாகி விண்ணாகி நின்றான் தான் காண்
தலையாய மலையெடுத்த தகவிலோனைத்
தகர்ந்துவிழ ஒருவிரலால் சாதித்தாண்ட
சிலையாரும் மடமகளோர் கூறன் தான் காண்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...