கோட்டூர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
நீலமார்தரு கண்டனே, நெற்றியோர் கண்ணனே, ஒற்றைவிடைச்
சூலமார் தரு கையனே, துன்று பைம்பொழில்கள் சூழ்ந்தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்றெழுவார்கள்
சால நீடலம் அதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காவே
(2)
பங்கயம் மலர்ச் சீறடிப் பஞ்சுறு மெல்விரல் அரவல்குல்
மங்கை மார்பலர், மயில்குயில் கிளியென மிழற்றிய மொழியார், மென்
கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்றெழுவார்கள்
சங்கையொன்றிலராகிச் சங்கரன் திருவருள் பெறல் எளிதாமே
(3)
நம்பனார் நல மலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல்லாம்
செம்பொனார் தரும் எழில்திகழ் முலையவர் செல்வமல்கிய நல்ல
கொம்பனார் தொழுதாடிய கோட்டூர் நற்கொழுந்தே என்றெழுவார்கள்
அம்பொனார் தரும் உலகினில் அமரரோடமர்ந்து இனிதிருப்பாரே
(4)
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொல் கிள்ளைகள் அன்னஞ் சேர்ந்தழகாய
குலவும் நீள்வயல் கயல்உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்றெழுவார்கள்
நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே
(5)
உருகுவார் உள்ளத்தொண்சுடர், தனக்கென்றும் அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமுதென நின்று, பரிவொடு பத்திசெய்து எத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும், போய் அவனருள் பெறலாமே
(6)
துன்று வார்சடைத் தூமதி மத்தமும், துன்னெருக்கார் வன்னி
பொன்றினார் தலைக்கலனொடு பரிகலம், புலியுரி உடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்றெழுவாரை
என்றும் ஏத்துவார்க்கிடரிலை, கேடிலை, ஏதம் வந்தடையாவே
(7)
மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணியரங்கணி சாலை
பாடு சூழ்மதில் பைம்பொன்செய் மண்டபம் பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்றெழுவார்கள்
கேடதொன்றிலராகி நல்லுலகினில் கெழுவுவர் புகழாலே
(8)
ஒளிகொள் வாளெயிற்றரக்கன் அவ்வுயர் வரையெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய ஊன்றலும், சோர்ந்திட வாளொடு நாள்அவற்கருள் செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறும் தவமுடையவர் தாமே
(9)
பாடியாடும் மெய்ப் பத்தர்கட்கருள் செயும் முத்தினைப், பவளத்தைத்
தேடி மாலயன் காணஒண்ணா தவத்திருவினைத், தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்றெழுவார்கள்
நீடு செல்வத்தராகி இவ்வுலகினில் நிகழ்தரு புகழாரே
(10)
கோணல் வெண்பிறைச் சடையனைக், கோட்டூர் நற்கொழுந்தினைச், செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின், பொய்யிலா மெய்யன் நல்லருள்என்றும்
காணல் ஒன்றிலாக் காரமண் தேரர் குண்டாக்கர் சொல் கருதாதே
பேணல் செய்தரனைத் தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே
(11)
பந்துலாவிரல் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோடுருவாரும்
கொந்துலா மலர் விரிபொழில் கோட்டூர் நற்கொழுந்தினைச், செழும்பவளம்
வந்துலாவிய காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்துரை செய்த
சந்துலாம் தமிழ்மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page