(1)
கருந்தடம் கண்ணின் மாதரார்இசை செய்யக் காரதிர்கின்ற பூம்பொழில்
குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்
இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுதேத்தும் மாந்தர்கள்
வருந்துமாறறியார் நெறிசேர்வர் வானூடே
(2)
நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொடும் மலர் வேண்டி வான்மழை
குன்றின்நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்
என்றும் மன்னிய எம்பிரான் கழல்ஏத்தி வான்அரசாள வல்லவர்
பொன்றுமாறு அறியார் புகழார்ந்த புண்ணியரே
(3)
விரவி நாளும் விழா விடைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்
குரவமாரும் நீழற்பொழில் மல்கு கோட்டாற்றில்
அரவ நீள்சடையானை உள்கி நின்றாதரித்து முன்அன்பு செய்தடி
பரவுமாறு வல்லார் பழி பற்றறுப்பாரே
(4)
அம்பினேர்விழி மங்கைமார் பலர் ஆடகம்பெறு மாட மாளிகைக்
கொம்பினேர் துகிலின் கொடியாடு கோட்டாற்றில்
நம்பனே நடனே நலந்திகழ் நாதனே என்று காதல் செய்தவர்
தம் பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே
(5)
பழைய தம்அடியார் துதி செயப், பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்
குழலு மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண்சிலம்பும் ஒலிசெயக் கானிடைக் கணமேத்த ஆடிய
அழகன் என்றெழுவார் அணியாவர் வானவர்க்கே
(6)
பஞ்சின் மெல்லடி மாதர், ஆடவர், பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்
கொஞ்சி இன்மொழியால் தொழில்மல்கு கோட்டாற்றில்
மஞ்சனே மணியே மணிமிடற்றண்ணலே என உள்நெகிழ்ந்தவர்
துஞ்சுமாறறியார், பிறவார் இத்தொல்நிலத்தே
(7)
கலவ மாமயிலாள்ஓர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசை
குலவுமாறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்
நிலவு மாமதிசேர் சடையுடை நின்மலா என உன்னுவார்அவர்
உலவு வானவரின் உயர்வாகுவது உண்மையதே
(8)
வண்டலார் வயல் சாலிஆலை வளம் பொலிந்திட வார்புனல்திரை
கொண்டலார் கொணர்ந்தங்குலவும் திகழ் கோட்டாற்றில்
தொண்டெலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே, கழலால் அரக்கனை
மிண்டெலாம் தவிர்த்தென் உகந்திட்ட வெற்றிமையே
(9)
கருதிவந்து அடியார் தொழுதெழக், கண்ணனோடுஅயன் தேட, ஆனையின்
குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்
விருதினால் மடமாது நீயும் வியப்பொடும் உயர்கோயில் மேவிவெள்
எருதுகந்தவனே இரங்காய் உனது இன்னருளே
(10)
உடையிலாதுழல்கின்ற குண்டரும், ஊணரும், தவத்தாய சாக்கியர்
கொடையிலா மனத்தார் குறையாரும் கோட்டாற்றில்
படையிலார் மழுவேந்தி ஆடிய பண்பனே, இவரென் கொலோ நுனை
அடைகிலாத வண்ணம், அருளாய் உன் அடியவர்க்கே
(11)
காலனைக் கழலால் உதைத்தொரு காமனைக் கனலாகச் சீறிமெய்
கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்
மூலனை, முடிவொன்றிலாத எம் முத்தனைப் பயில் பந்தன் சொல்லிய
மாலை பத்தும் வல்லார்க்கெளிதாகும் வானகமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...