(1)
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை
ஓதிய ஒண்பொருளாகி நின்றான், ஒளியார் கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
ஆதியையே நினைந்தேத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே
(2)
ஏலமலர்க்குழல் மங்கை நல்லாள் இமவான் மகள்
பாலமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்
கோலமலர்ப் பொழில் சூழ்ந்து எழிலார் திருக்கோட்டாற்றுள்
ஆலநீழற்கீழ் இருந்துஅறம் சொன்ன அழகனே
(3)
இலைமல்கு சூலமொன்று ஏந்தினானும், இமிமையோர் தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனாய் அம்மணிகண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை ஏற்றுகந்த அழகனன்றே
(4)
ஊனமரும் உடலுள் இருந்த உமைபங்கனும்
வானமரும் மதி சென்னிவைத்த மறையோதியும்
தேனமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
தானமரும் விடையானும் எங்கள் தலைவனன்றே
(5)
வம்பலரும் மலர்க்கோதை பாகம்மகிழ் மைந்தனும்
செம்பவளத் திருமேனி வெண்ணீறணி செல்வனும்
கொம்பமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள்
நம்பன்எனப் பணிவார்க்கருள் செய் எங்கள் நாதனே
(6)
பந்தமரும் விரல் மங்கை நல்லாள்ஒரு பாகமா
வெந்தமரும் பொடிப் பூசவல்ல விகிர்தன், மிகும்
கொந்தமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அந்தணனை நினைந்தேத்த வல்லார்க்கில்லை அல்லலே
(7)
துண்டமரும் பிறைசூடி நீடுசுடர் வண்ணனும்
வண்டமரும் குழல் மங்கை நல்லாள்ஒரு பங்கனும்
தெண்திரை நீர்வயல் சூழ்ந்தழகார் திருக்கோட்டாற்றுள்
அண்டமும் எண்திசையாகி நின்ற அழகனன்றே
(8)
இரவமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கிறை
கரவமரக் கயிலையெடுத்தான் வலி செற்றவன்
குரவமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவமரும் சடையான் அடியார்க்கருள் செய்யுமே
(9)
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணராவகை
நீங்கிய தீயுருவாகி நின்ற நிமலன், நீழல்
கோங்கமரும் பொழில் சூழ்ந்தெழிலார் திருக்கோட்டாற்றுள்
ஆங்கமரும் பெருமான் அமரர்க்கு அமரனன்றே
(10)
கடுக்கொடுத்த துவராடையர் காட்சி இல்லாததோர்
தடுக்கிடுக்கிச் சமணே திரிவார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில்லாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள்
இடுக்கணின்றித் தொழுவார் அமரர்க்கு இறையாவரே
(11)
கொடியுயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடிகழல் ஆர்க்க நின்றாடவல்ல அருளாளனைக்
கடிகமழும் பொழில் காழியுண் ஞானசம்பந்தன் சொல்
படியிவை பாடி நின்றாட வல்லார்க்கில்லை பாவமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...