கொண்டீச்சரம் – அப்பர் தேவாரம் (2):

<– கொண்டீச்சரம்

(1)
கண்ட பேச்சினில் காளையர் தங்கள்பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி ஈச்சுரவர்க்கருள் செய்தஅக்
கொண்டிஈச்சுரவன் கழல் கூறுமே
(2)
சுற்றமும் துணை நன்மடவாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
குற்றமில் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்றலால்ஒரு பற்று மற்றில்லையே
(3)
மாடு தானதில்லெனில் மாநுடர்
பாடுதான் செல்வாரில்லை, பன் மாலையால்
கூட நீர்சென்று கொண்டீச்சுரவனைப்
பாடுமின் பரலோகத்திருத்துமே
(4)
தந்தை தாயொடு தாரமெனும் தளைப்
பந்தம் ஆங்கறுத்துப் பயில்வெய்திய
கொந்தவிழ் பொழில் கொண்டீச்சுரவனைச்
சிந்தை செய்மின் அவனடி சேரவே
(5)
கேளுமின் இளமைய்யது கேடுவந்து
ஈளையோடு இருமல்லது எய்தன்முன்
கோளரா அணி கொண்டீச்சுரவனை
நாளும் ஏத்தித் தொழுமின் நன்காகுமே
(6)
வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்பமும் துயரும் எனும் சூழ்வினை
கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை
எம்பிரான்என வல்லவர்க்கில்லையே
(7)
அல்லலோடு அரு நோயில் அழுந்திநீர்
செல்லுமா நினையாதே கனைகுரல்
கொல்லைய ஏறுடைக் கொண்டீச்சுரவனை
வல்லவாறு தொழ வினை மாயுமே
(8)
நாறு சாந்தணி நன்முலை மென்மொழி
மாறிலா மலை மங்கையொர் பாகமாக்
கூறனார் உறை கொண்டீச்சுர நினைந்து
ஊறுவார் தமக்கூனம் ஒன்றில்லையே
(9)
அயிலார் அம்பெரி மேரு வில்லாகவே
எயிலாரும் பொடியாய் விழ எய்தவன்
குயிலாரும் பொழில் கொண்டீச்சுரவனைப்
பயில்வாரும் பெருமை பெறும் பாலரே
(10)
நிலையினார் வரை நின்றெடுத்தான் தனை
மலையினால் அடர்த்து விறல் வாட்டினான்
குலையினார் பொழில் கொண்டீச்சுரவனைத்
தலையினால் வணங்கத் தவமாகுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page