கொடுங்குன்றம்:

<– பாண்டிய நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
வானில் பொலிவெய்தும் மழைமேகம் கிழித்தோடிக்
கூனல்பிறை சேருங்குளிர் சாரல் கொடுங்குன்றம்
ஆனில்பொலி ஐந்தும் அமர்ந்தாடி உலகேத்தத்
தேனில்பொலி மொழியாளொடு மேயான் திருநகரே
(2)
மயில்புல்கு தண்பெடையோடு உடனாடும் வளர் சாரல்
குயிலின் இசை பாடும்குளிர் சோலைக் கொடுங்குன்றம்
அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்தி நின்றாடி
எயில் முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே
(3)
மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமலர் உந்திக்
குளிரும்புனல் பாயும்குளிர் சாரல் கொடுங்குன்றம்
கிளர் கங்கையொடிள வெண்மதி கெழுவும் சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான் வளநகரே
(4)
பருமாமத கரியோடரி இழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி அருவிக் கொடுங்குன்றம்
பொருமாஎயில் வரைவில்தரு கணையில்பொடி செய்த
பெருமான்அவன் உமையாளொடு மேவும் பெருநகரே
(5)
மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ் வரைஇழியும்
கூகைக்குலம் ஓடித்திரி சாரல் கொடுங்குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந் நலமங்கை
பாகத்தவன் இமையோர்தொழ மேவும் பழநகரே
(6)
கைம்மாமத கரியின்இன மிடியின் குரலதிரக்
கொய்ம்மா மலர்ச் சோலைபுக மண்டும் கொடுங்குன்றம்
அம்மான்என உள்கித் தொழுவார்கட்கருள் செய்யும்
பெம்மான்அவன் இமையோர்தொழ மேவும் பெருநகரே
(7)
மரவத்தொடு மணமாதவி மௌவல்அது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண் கொடுங்குன்றம்
அரவத்தொடும் இளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான் நெடு நகரே
(8)
முட்டாமுது கரியின்இன முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை அவைமண்டி நின்றாடும் கொடுங்குன்றம்
ஒட்டா அரக்கன் தன் முடியொரு பஃதவை உடனே
பிட்டான்அவன் உமையாளொடு மேவும் பெரு நகரே
(9)
அறையும்அரி குரலோசையை அஞ்சியடு மானை
குறையும் மனமாகிம் முழை வைகும் கொடுங்குன்றம்
மறையும் அவை உடையான்என நெடியான்என இவர்கள்
இறையும் அறிவொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே
(10)
மத்தக் களிறாளிவ்வர அஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகும் கொடுங்குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர் புறங்கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேய பழநகரே
(11)
கூனல்பிறை சடைமேல்மிக உடையான் கொடுங்குன்றைக்
கானல் கழுமலமா நகர் தலைவன்நல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள் தமிழ்வல்லார்
ஊனத்தொடு துயர் தீர்ந்துலகேத்தும் எழிலோரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page