கைச்சினம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
தையலோர் கூறுடையான், தண்மதிசேர் செஞ்சடையான்
மையுலா மணிமிடற்றான், மறைவிளங்கு பாடலான்
நெய்யுலா மூவிலைவேல் ஏந்தி நிவந்தொளி சேர்
கையுடையான், மேவிஉறை கோயில் கைச்சினமே
(2)
விடமல்கு கண்டத்தான், வெள்வளைஓர் கூறுடையான்
படமல்கு பாம்பரையான், பற்றாதார் புரமெரித்தான்
நடமல்கும் ஆடலினான், நான்மறையோர் பாடலினான்
கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே
(3)
பாடலார் நான்மறையான், பைங்கொன்றை பாம்பினொடும்
சூடலான் வெண்மதியம், துன்று கரந்தையொடும்
ஆடலான் அங்கை அனலேந்தி, ஆடரவக்
காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே
(4)
பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்சு
உண்ட பிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
விண்டவர்கள் தொல்நகரம் மூன்றுடனே வெந்தவியக்
கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே
(5)
தேய்ந்துமலி வெண்பிறையான், செய்யதிரு மேனியினான்
வாய்ந்திலங்கு வெண்ணீற்றான், மாதினையோர் கூறுடையான்
சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல் நஞ்சுண்டு, அநங்கைக்
காய்ந்த பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே
(6)
மங்கையோர் கூறுடையான், மன்னு மறை பயின்றான்
அங்கையோர் வெண்தலையான், ஆடரவம் பூண்டுகந்தான்
திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேல்
கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே
(7)
வரிஅரவே நாணாக, மால்வரையே வில்லாக
எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்ததோர்
கரிஉரியான், மேவியுறை கோயில் கைச்சினமே
(8)
போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
மாதுமையாள் அஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்றாடும்
காதலினான், மேவியுறை கோயில் கைச்சினமே
(9)
மண்ணினை முன் சென்றிரந்த மாலும் மலரவனும்
எண்ணறியா வண்ணம் எரியுருவமாய பிரான்
பண்ணிசையால் ஏத்தப் படுவான், தன் நெற்றியின்மேல்
கண்ணுடையான், மேவியுறை கோயில் கைச்சினமே
(10)
….
(11)
தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார்
விண்ணவராய் ஓங்கி வியனுலகம் ஆள்வாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page