குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய்
உழைத்தால் உறுதியுண்டோ தான்?
உமையாள் கணவா எனைஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ?
பிறைசேர் சடையாய் முறையோ !என்ற
ழைத்தால் அருளாதொழிவதே
அம்மானே உன்னடியேற்கே
(2)
அடியேன் அல்லல் எல்லாம்முன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன்
கொடியேர் இடையாள் கூறா – எங்
கோவே – ஆஆ என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத(து)
எத்துக்கெங்கள் சிவலோகா?
உடையாய் – கூவிப் !பணிகொள்ளா
தொறுத்தால் ஒன்றும் போதுமே
(3)
ஒன்றும் போதா நாயேனை
உய்யக் கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோ தான்
ஏழைபங்கா – எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள்
குணமாம் என்றே நீகொண்டால்
என்தான் கெட்ட(து) ? – இரங்கிடாய்
எண்தோள் முக்கண் எம்மானே
(4)
மானேர் நோக்கி மணவாளா
மன்னே நின்சீர் !மறப்பித்திவ்
வூனே புக என்றனை நூக்கி
உழலப் பண்ணுவித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை
அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளும்நாள்
என்றென்றுன்னைக் கூறுவதே
(5)
கூறும் நாவே முதலாகக்
கூறுங் கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ, திகைப்பும்நீ
தீமை நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங்கொன்றில்லை
மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா?
திகைத்தால் தேற்ற வேண்டாவோ
(6)
வேண்டத் தக்கதறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீ யாதருள் செய்தாய்?
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே
(7)
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றேசெய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே
(8)
நாயிற் கடையாம் நாயேனை
நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே
வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான்
என்னதோ இங்கதிகாரம்
காயத்திடுவாய் – உன்னுடைய
கழற்கீழ் வைப்பாய் – கண்ணுதலே
(9)
கண்ணார் நுதலோய் கழலிணைகள்
கண்டேன் கண்கள் களிகூர
எண்ணாதிரவும் பகலும் நான்
அவையே எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும்
வந்துன் கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமை சால அழகுடைத்தே
(10)
அழகே புரிந்திட்டடி நாயேன்
அரற்றுகின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி
காட்டி என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப்
புராண நீ தந்தருளாதே
குழகா கோல மறையோனே
கோனே என்னைக் குழைத்தாயே
