குற்றாலம் – சம்பந்தர் தேவாரம் (1):

<– குற்றாலம்

(1)
வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர்வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண்டு யாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோடு ஆடலமர்ந்தான், அலர்கொன்றை
நம்பான் மேய நன்னகர்போலும் நமரங்காள்
(2)
பொடிகள்பூசித் தொண்டர்பின் செல்லப், புகழ்விம்மக்
கொடிகளோடும் நாள் விழமல்கு குற்றாலம்
கடிகொள் கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகள்மேய நன்னகர்போலும் அடியீர்காள்
(3)
செல்வமல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குற்றாலம்
வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக
நல்கும் நம்பான் நன்னகர் போலும் நமரங்காள்
(4)
பக்கம் வாழைப் பாய்கனியோடு பலவின்தேன்
கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம்
அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோர் அனலேந்தும்
நக்கன்மேய நன்னகர் போலும் நமரங்காள்
(5)
மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்
இலையார்சூலம் ஏந்திய கையான், எயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர்
(6)
மைம்மா நீலக்கண்ணியர் சாரல் மணிவாரிக்
கொய்ம்மா ஏனலுண் கிளிஓப்பும் குற்றாலம்
கைம்மா வேழத்தீருரி போர்த்த கடவுள்எம்
பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்
(7)
நீலநெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்
கோல மஞ்ஞை பேடையொடாடும் குற்றாலம்
காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள்எம்
சூலபாணி நன்னகர் போலும் தொழுவீர்காள்
(8)
போதும் பொன்னும் உந்தியருவி புடைசூழக்
கூதல்மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்
மூதூர் இலங்கை முட்டிய கோனை முறைசெய்த
நாதன்மேய நன்னகர் போலும் நமரங்காள்
(9)
அரவின் வாயில் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று
குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமைஎம்
பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள்
(10)
பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடை புல்கிக்
குருந்தமேறிச் செவ்வழி பாடும் குற்றாலம்
இருந்துண் தேரும், நின்றுண் சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்
(11)
மாடவீதி வருபுனல் காழியார் மன்னன்
கோடலீன்று கொழுமுனை கூம்பும் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page