(1)
திருந்த மதிசூடித், தெண்ணீர் சடைக்கரந்து, தேவிபாகம்
பொருந்திப், பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்தசெல்வர்
இருந்த இடம்வினவில், ஏலங்கமழ் சோலையின வண்டு யாழ்செய்
குருந்த மணநாறும் குன்றிடம்சூழ் தண்சாரல் குறும்பலாவே
(2)
நாள்பலவும் சேர் மதியம்சூடிப் பொடியணிந்த நம்பான், நம்மை
ஆட்பலவும் தானுடைய அம்மான் இடம் போலும், அந்தண் சாரல்
கீள்பலவும் கீண்டுகிளை கிளையன் மந்தி பாய்ந்துண்டு விண்ட
கோள்பலவின் தீங்கனியை மாக்கடுவன் உண்டுகளும் குறும்பலாவே
(3)
வாடல் தலைமாலை சூடிப், புலித்தோல் வலித்துவீக்கி
ஆடல் அரவசைத்த அம்மான் இடம் போலும், அந்தண் சாரல்
பாடல் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து, பசும்பொன்உந்திக்
கோடல் மணங்கமழும் குன்றிடம்சூழ் தண்சாரல் குறும்பலாவே
(4)
பால்வெண் மதிசூடிப், பாகத்தோர் பெண்கலந்து பாடியாடிக்
காலனுடல் கிழியக் காய்ந்தார் இடம் போலும், கல்சூழ் வெற்பில்
நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்
கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டயரும் குறும்பலாவே
(5)
தலைவாண் மதியம் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித், தேவி
முலைபாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும், முதுவேய் சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியும் தேன்பிலிற்றும் குறும்பலாவே
(6)
நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர், தண்மதியர், நெற்றிக்கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தார் இடம் போலும், குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேனம் ஏனம் இவையோடவை விரவியிழி பூஞ்சாரல்
கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலும் குறும்பலாவே
(7)
பொன்தொத்த கொன்றையும், பிள்ளை மதியும், புனலும்சூடிப்
பின்தொத்த வார்சடைஎம் பெம்மான் இடம் போலும், பிலயம் தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக்
குன்றத்தருவி அயலே புனல்ததும்பும் குறும்பலாவே
(8)
ஏந்து திணிதிண்தோள் இராவணனை மால்வரைக்கீழ் அடரவூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவர் இடம் போலும், சாரல் சாரல்
பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து, மத்தகத்தில் பொலிய ஏந்திக்
கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே
(9)
அரவின் அணையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல், சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க்கிடம் போலும், விரி பூஞ்சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தக்
குரவ முறுவல் செய்யும் குன்றிடம்சூழ் தண்சாரல் குறும்பலாவே
(10)
மூடிய சீவரத்தர் முன் கூறுண்டு ஏறுதலும், பின் கூறுண்டு
காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம் போலும், கல்சூழ் வெற்பில்
நீடுயர் வேய் குனியப் பாய்கடுவன் நீள்கழை மேல் நிருத்தம் செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்கும் குறும்பலாவே
(11)
கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற்றண்ணல்
நம்பான் அடிபரவு நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன
இன்பாய பாடல் இவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகல நல்வினைகள் தளராவன்றே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...