குரங்கணில்முட்டம்:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
விழுநீர் மழுவாள் படை அண்ணல் விளங்கும்
கழுநீர் குவளை மலரக் கயல் பாயும்
கொழுநீர் வயல்சூழ்ந்த குரங்கணில் முட்டம்
தொழு நீர்மையர் தீதுறு துன்பம் இலரே
(2)
விடைசேர் கொடிஅண்ணல் விளங்குயர் மாடக்
கடைசேர் கருமென் குளத்தோங்கிய காட்டில்
குடையார் புனல்மல்கு குரங்கணில்முட்டம்
உடையான் எனைஆளுடை எந்தை பிரானே
(3)
சூலப் படையான், விடையான், சுடுநீற்றான்
காலன்தனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப் பொழில் சூழ்ந்த குரங்கணில்முட்டத்து
ஏலம்கமழ் புன்சடை எந்தை பிரானே
(4)
வாடா விரிகொன்றை, வலத்தொரு காதில்
தோடார் குழையால் நலபாலன நோக்கி
கூடாதன செய்த குரங்கணில் முட்டம்
ஆடா வருவார் அவர் அன்புடையாரே
(5)
இறையார் வளையாளை ஓர் பாகத்தடக்கிக்
கறையார் மிடற்றான், கரிகீறிய கையான்
குறையார் மதிசூடி குரங்கணில்முட்டத்து
உறைவான் எமைஆளுடை ஒண்சுடரானே
(6)
பலவும் பயனுள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவும் மயில் காமுறு பேடையொடு ஆடிக்
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும் பெருமான் அடிநித்தல் நினைந்தே
(7)
மாடார் மலர்க்கொன்றை வளர்சடை வைத்துத்
தோடார் குழைதான் ஒருகாதில் இலங்கக்
கூடார் மதிலெய்து குரங்கணில் முட்டத்து
ஆடார்அரவம் அரையார்த்தமர்வானே
(8)
மையார் நிறமேனி அரக்கர் தங்கோனை
உய்யா வகையால் அடர்த்தின்னருள் செய்த
கொய்யார் மலர் சூடி குரங்கணில்முட்டம்
கையால் தொழுவார் வினை காண்டலரிதே
(9)
வெறியார் மலர்த் தாமரையானொடு மாலும்
அறியாது அசைந்தேத்த ஓர்ஆரழலாகும்
குறியால் நிமிர்ந்தான்தன் குரங்கணில்முட்டம்
நெறியால் தொழுவார் வினை நிற்ககிலாவே
(10)
கழுவார் துவராடை கலந்து மெய் போர்க்கும்
வழுவாச் சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்
குழுமின் சடையண்ணல் குரங்கணில்முட்டத்து
எழில்வெண் பிறையான் அடிசேர்வது இயல்பே
(11)
கல்லார் மதிற்காழியுண் ஞானசம்பந்தன்
கொல்லார் மழுவேந்தி குரங்கணில் முட்டம்
சொல்லார் தமிழ்மாலை செவிக்கு இனிதாக
வல்லார்க்கெளிதாம் பிறவா வகை வீடே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page