(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
மரக் கொக்காம்என வாய்விட்டலறி நீர்
சரக்குக் காவித் திரிந்தயராது, கால்
பரக்கும் காவிரி நீரலைக்கும் கரைக்
குரக்குக்கா அடையக் கெடும் குற்றமே
(2)
கட்டாறே கழி காவிரி பாய்வயல்
கொட்டாறே புனலூறு குரக்குக்கா
முட்டாறா அடியேத்த முயல்பவர்க்கு
இட்டாறா இடரோட எடுக்குமே
(3)
கையனைத்தும் கலந்தெழு காவிரி
செய் அனைத்திலும் சென்றிடும் செம்புனல்
கொய்யனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத் தொழுவார்க்கல்லல் இல்லையே
(4)
மிக்கனைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கினம் பயில் சோலைக் குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே
(5)
விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வயல் எங்கும் பரந்திடக்
கொட்டமா முழவோங்கு குரக்குக்கா
இட்டமாய் இருப்பார்க்கு இடரில்லையே
(6)
மேலை வானவரோடு விரிகடல்
மாலும் நான்முகனாலும் அளப்பொணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்
பாலராய்த் திரிவார்க்கில்லை பாவமே
(7)
ஆல நீழல் அமர்ந்த அழகனார்
காலனை உதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள்ஆலும் குரக்குக்காப்
பாலருக்கருள் செய்வர் பரிவொடே
(8)
செக்கர் அங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்கரையர் எம்ஆதி புராணனார்
கொக்கினம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனைத் தொழ நம்வினை நாசமே
(9)
உருகிஊன் குழைந்தேத்தி எழுமின்நீர்
கரிய கண்டன் கழலடி தன்னையே
குரவனம் செழுங்கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே
(10)
இரக்கமின்றி மலைஎடுத்தான் முடி
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம்
குரக்கினம் குதிகொள்ளும் குரக்குக்கா
வரத்தனைப் பெற வானுலகு ஆள்வரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...