குயிற் பத்து

<– திருவாசகம்

(1)
கீதம் இனிய குயிலே – கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதமிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை
ஆதி – குணமொன்றும் இல்லான அந்தமிலான் வரக் கூவாய்

(2)
ஏர்தரும் ஏழுலகேத்த எவ்வுருவுந் தன்னுருவாம்
ஆர்கலி சூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப்
பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய்

(3)
நீல உருவிற் குயிலே – நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயிற்
சீலம் பெரிதும் இனிய திருஉத்தரகோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயகனை வரக் கூவாய்

(4)
தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயிலே இதுகேள்நீ
வான் பழித்திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்
ஊன் பழித்துள்ளம் புகுந்தென் உணர்வதுவாய ஒருத்தன்
மான் பழித்தாண்ட மென்னோக்கி மணாளனை நீவரக் கூவாய்

(5)
சுந்தரத்தின்பக் குயிலே – சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத்தே நின்றிழிந்திங்கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவுமாகிய மூவரறியாச்
சிந்துரச் சேவடியானைச் சேவகனை வரக் கூவாய்

(6)
இன்பந் தருவன் குயிலே – ஏழுலகும் முழுதாளி
அன்பன், அமுதளித்தூறும் ஆனந்தன், வான்வந்த தேவன்
நன்பொன் மணிச்சுவடொத்த நற்பரிமேல் வருவானைக்
கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய்

(7)
உன்னை உகப்பன் குயிலே – உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்த நன்மேனிப் புகழில் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் – சேரலன் – சோழன் சீர்ப்புயங்கன் வரக் கூவாய்

(8)
வாவிங்கே நீகுயிற்பிள்ளாய் – மாலொடு நான்முகன் தேடி
ஓவிஅவர் உன்னி நிற்ப – ஒண்டழல் விண் பிளந்தோங்கி
மேவி அன்றண்டங் கடந்து – விரிசுடராய் நின்ற மெய்யன்
தாவி வரும் பரிப்பாகன் தாழ்சடையோன் வரக் கூவாய்

(9)
காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே
சீருடைச் செங்கமலத்தில் திகழுருவாகிய செல்வன்
பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனையாண்ட
ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய்

(10)
கொந்தணவும் பொழிற் சோலைக் கூங்குயிலே இது கேள்நீ
அந்தணனாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி
எந்தமராம்இவன் என்றிங்கென்னையும் ஆட்கொண்டருளும்
செந்தழல் போல் திருமேனித் தேவர்பிரான் வரக் கூவாய்

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page