(1)
திகழும் திருமாலொடு நான்முகனும்
புகழும் பெருமான், அடியார் புகல
மகிழும் பெருமான், குடவாயில் மன்னி
நிகழும் பெருங்கோயில் நிலாயவனே
(2)
ஓடும் நதியும் மதியோடுரகம்
சூடும் சடையன், விடைதொல் கொடிமேல்
கூடும் குழகன், குடவாயில் தனில்
நீடும் பெருங்கோயில் நிலாயவனே
(3)
கலையான் மறையான், கனலேந்து கையான்
மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்
கொலையார் சிலையான், குடவாயில் தனில்
நிலையார் பெருங்கோயில் நிலாயவனே
(4)
சுலவும் சடையான், சுடுகாடு இடமா
நலமென் முலையாள் நகைசெய்ய நடம்
குலவும் குழகன், குடவாயில் தனில்
நிலவும் பெருங்கோயில் நிலாயவனே
(5)
எந்தன் உளமேவி இருந்த பிரான்
கன்றன், மணிபோல் மிடறன், கயிலைக்
குன்றன், குழகன், குடவாயில் தனில்
நின்ற பெருங்கோயில் நிலாயவனே
(6)
அலைசேர் புனலன், அனலன், அமலன்
தலைசேர் பலியன், சதுரன், விதிரும்
கொலைசேர் படையன், குடவாயில் தனில்
நிலைசேர் பெருங்கோயில் நிலாயவனே
(7)
அறையார் கழலன், அழலன், இயலின்
பறையாழ் முழவும் மறைபாட நடம்
குறையா அழகன், குடவாயில் தனில்
நிறையார் பெருங்கோயில் நிலாயவனே
(8)
வரையார் திரள்தோள் அரக்கன் மடிய
வரையார ஓர்கால் விரல்வைத்த பிரான்
வரையார் மதில்சூழ் குடவாயில் மன்னும்
வரையார் பெருங்கோயில் மகிழ்ந்தவனே
(9)
பொன்னொப்பவனும் புயலொப்பவனும்
தன்னொப்பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னல் படையான் குடவாயில் தனில்
மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே
(10)
வெயிலின் நிலையார், விரி போர்வையினார்
பயிலும் உரையே பகர் பாவிகள் பால்
குயிலன், குழகன், குடவாயில்தனில்
உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே
(11)
கடுவாய் மலிநீர் குடவாயில் தனில்
நெடுமா பெருங்கோயில் நிலாயவனைத்
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ் வல்லவர் நல்லவரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...