குடவாயில் – சம்பந்தர் தேவாரம் (2):

<– குடவாயில்

(1)
கலைவாழும் அங்கையீர், கொங்கையாரும் கருங்கூந்தல்
அலைவாழும் செஞ்சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர்
குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில்
நிலைவாழும் கோயிலே கோயிலாக நின்றீரே
(2)
அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும்ஆர்ப்ப, அங்கையில்
செடியார்ந்த வெண்தலை ஒன்றேந்தி உலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவிஏத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே
(3)
கழலார்பூம் பாதத்தீர், ஓதக்கடலில் விடமுண்டன்று
அழலாரும் கண்டத்தீர், அண்டர் போற்றும் அளவினீர்
குழலார வண்டினங்கள் கீதத்தொலி செய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
(4)
மறியாரும் கைத்தலத்தீர், மங்கை பாகமாகச் சேர்ந்து
எரியாரும் மாமழுவும் எரியும்ஏந்தும் கொள்கையீர்
குறியார வண்டினங்கள் தேன்மிழற்றும் குடவாயில்
நெறியாரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
(5)
இழையார்ந்த கோவணமும் கீளும் எழிலார் உடையாகப்
பிழையாத சூலம் பெய்து, ஆடல் பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே
(6)
அரவார்ந்த திருமேனியான வெண்ணீறாடினீர்
இரவார்ந்த பெய்பலி கொண்டு, இமையோர்ஏத்த நஞ்சுண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசும் குடவாயில்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே
(7)
பாடலார் வாய்மொழியீர், பைங்கண் வெள்ளேறு ஊர்தியீர்
ஆடலார் மாநடத்தீர், அரிவைபோற்றும் ஆற்றலீர்
கோடலார் தும்பி முரன்று இசைமிழற்றும் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
(8)
கொங்கார்ந்த பைங்கமலத்தயனும், குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர், இலங்கைக் கோன்
தங்காதல் மாமுடியும் தாளும் அடர்த்தீர், குடவாயில்
பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே
(9)
(10)
தூசார்ந்த சாக்கியரும், தூய்மையில்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழி நீத்து, எழில்கொள் மாடக் குடவாயில்
ஆசாரம் செய் மறையோர் அளவில் குன்றாது அடிபோற்றத்
தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே
(11)
நளிர் பூந்திரைமல்கு காழி ஞானசம்பந்தன்
குளிர் பூங்குடவாயில் கோயில்மேய கோமானை
ஒளிர் பூந்தமிழ் மாலை உரைத்தபாடல் இவை வல்லார்
தளர்வான தானொழியத் தகுசீர் வானத்திருப்பாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page