(1)
அரவிரி கோடல் நீடலணி காவிரியாற்றயலே
மரவிரி போது மௌவல் மண மல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலை சூழ்ந்த குழகன், குடமூக்கு இடமா
இரவிரி திங்கள்சூடி இருந்தான் அவனெம் இறையே
(2)
ஓத்தரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்தயலே
பூத்தரவங்களோடும் புகை கொண்டு அடிபோற்றி நல்ல
கூத்தரவங்கள் ஓவாக் குழகன், குடமூக்கு இடமா
ஏத்தரவங்கள் செய்ய இருந்தான் அவனெம் இறையே
(3)
மயில்பெடை புல்கியால, மணல் மேல் மடஅன்ன மல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழம்காவிரிப் பைம்பொழில் வாய்க்
குயில்பெடையோடு பாடல் உடையான், குடமூக்கு இடமா
இயலொடு வானமேத்த இருந்தான் அவனெம் இறையே
(4)
மிக்கரை தாழ வேங்கையுரி ஆர்த்து, உமையாள் வெருவ
அக்கரவு ஆமை ஏனமருப்போடவை பூண்டு, அழகார்
கொக்கரையோடு பாடலுடையான், குடமூக்கு இடமா
எக்கரை யாருமேத்த இருந்தான் அவனெம் இறையே
(5)
வடிவுடை வாள் தடங்கண் உமை அஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட உரி கொண்டவன், புன்சடையான்
கொடிநெடு மாடமோங்கும் குழகன், குடமூக்கு இடமா
இடிபடு வானமேத்த இருந்தான் அவனெம் இறையே
(6)
கழைவளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்றயலே
தழைவளர் மாவினல்ல பலவின் கனிகள் தங்கும்
குழைவளர் சோலை சூழ்ந்த குழகன், குடமூக்கு இடமா
இழைவளர் மங்கையோடிருந்தான் அவனெம் இறையே
(7)
மலைமலி மங்கைபாகம் மகிழ்ந்தான் எழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையால் சிதைத்தான் புர மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம்வீழ் குடமூக்கு இடமா
இலைமலி சூலமேந்தி இருந்தான் அவனெம் இறையே
(8)
நெடுமுடி பத்துடைய நிகழ் வாளரக்கன் உடலைப்
படுமிடர் கண்டயரப் பருமால்வரைக் கீழ் அடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு பழம்வீழ் குடமூக்கு இடமா
இடுமணல் எக்கர்சூழ இருந்தான் அவனெம் இறையே
(9)
ஆரெரி ஆழியானும், மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல் நிரம்பா மதிசூடி நல்ல
கூரெரியாகி நீண்ட குழகன், குடமூக்கு இடமா
ஈருரி கோவணத்தோடு இருந்தான் அவனெம் இறையே
(10)
மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லாம் உடையான், குடமூக்கு இடமா
ஏடலர் கொன்றைசூடி இருந்தான் அவனெம் இறையே
(11)
வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
தண் குடமூக்கமர்ந்தான் அடிசேர் தமிழ்பத்தும் வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...