குடமூக்கு – அப்பர் தேவாரம்:

<– குடமூக்கு

(1)
பூவணத்தவன், புண்ணியன், நண்ணியங்கு
ஆவணத்துடையான் அடியார்களைத்
தீவணத் திருநீறுமெய் பூசியோர்
கோவணத்துடையான் குடமூக்கிலே
(2)
பூத்தாடிக் கழியாதே நீர் பூமியீர்
தீத்தாடித் திறம் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தாடும் காளி தன்விசை தீர்கென்று
கூத்தாடி உறையும் குடமூக்கிலே
(3)
நங்கையாள் உமையாள்உறை நாதனார்
அங்கையாளொடு அறுபதம் தாழ்சடைக்
கங்கையாளவள் கன்னி எனப்படும்
கொங்கையால் உறையும் குடமூக்கிலே
(4)
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிதாகும், இயமுனை
சேதா ஏறுடையான் அமர்ந்தஇடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே
(5)
நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சே
வக்கரை உறைவானை வணங்குநீ
அக்கரையோடு அரவரை ஆர்த்தவன்
கொக்கரை உடையான் குடமூக்கிலே
(6)
துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்டஎம்
குறவனார் உறையும் குடமூக்கிலே
(7)
தொண்டராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்டவர் புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்டவன் உறையும் குடமூக்கிலே
(8)
காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்தங்குள்ளத்து உணர்மினோ
சாமியோடு சரச்சுவதியவள்
கோமியும் உறையும் குடமூக்கிலே
(9)
சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பலநாளும் பயிற்றுமின்
பிரமன் மாலொடு மற்றொழிந்தார்க்கெலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே
(10)
அன்று தான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தானெடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல்விரலூன்றிப் பின்
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page