(1)
மின்னுலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரு அரவோடும்
பன்னுலாவிய மறையொலி நாவினர், கறையணி கண்டத்தர்
பொன்னுலாவிய கொன்றையந்தாரினர், புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னுலாவிய சிந்தையர் மேல்வினை ஓடிட வீடாமே
(2)
நீருலாவிய சடையிடை அரவொடு மதிசிர நிரைமாலை
வாருலாவிய வனமுலை அவளொடு மணிசிலம்பு அவைஆர்க்க
ஏருலாவிய இறைவனதுறைவிடம் எழில்திகழ் கீழ்வேளூர்
சீருலாவிய சிந்தை செய்தணைபவர் பிணியொடு வினை போமே
(3)
வெண்ணிலா மிகு விரிசடை அரவொடு வெள்ளெருக்கு அலர்மத்தம்
பண்ணிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணிலாவிய பாகனைப் பெருந்திருக்கோயில் எம்பெருமானை
உண்ணிலாவி நின்றுள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே
(4)
சேடுலாவிய கங்கையைச் சடையிடைத் தொங்க வைத்தழகாக
நாடுலாவிய பலிகொளும் நாதனார் நலமிகு கீழ்வேளூர்ப்
பீடுலாவிய பெருமையர் பெருந்திருக்கோயிலுள் பிரியாது
நீடுலாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே
(5)
துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலை
மன்றுலாவிய மாதவர் இனிதியல் மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை நினைவோடும்
சென்றுலாவி நின்றேத்த வல்லார் வினை தேய்வது திணமாமே
(6)
கொத்துலாவிய குழல்திகழ் சடையனைக், கூத்தனை, மகிழ்ந்துள்கித்
தொத்துலாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்துலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில் மன்னும்
முத்துலாவிய வித்தினை ஏத்துமின் முடுகிய இடர்போமே
(7)
பிறை நிலாவிய சடையிடைப் பின்னலும் வன்னியும் துன்னாரும்
கறை நிலாவிய கண்டர், எண் தோளினர், காதல்செய் கீழ்வேளூர்
மறைநிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில் மன்னு
நிறைநிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே
(8)
மலை நிலாவிய மைந்தன் அம்மலையினை எடுத்தலும் அரக்கன் தன்
தலையெலாம் நெரிந்தலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர்க்
கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெருந்திருக்கோயிலுள்
நிலைநிலாவிய ஈசனை நேசத்தால் நினையவல் வினைபோமே
(9)
மஞ்சுலாவிய கடல் கிடந்தவனொடு, மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சுலாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவொடும்
செஞ்சொலார் பலர்பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சுலாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே
(10)
சீறுலாவிய தலையினர், நிலையிலா அமணர்கள் சீவரார்
வீறிலாத வெஞ்சொல் பல விரும்பன்மின், சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறுலாவிய கொடியனை ஏதமில் பெருந்திருக்கோயில் மன்னு
பேறுலாவிய பெருமையன் திருவடி பேணுமின் தவமாமே
(11)
குருண்ட வார்குழல் சடையுடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறையவர் தொழும் பெருந்திருக்கோயில் எம்பெருமானை
இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல்லார் அவர் சிவகதி பெறுவது திடமாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...