கீழ்வேளூர் – அப்பர் தேவாரம்:

<– கீழ்வேளூர்

(1)
ஆளான அடியவர்கட்கன்பன் தன்னை
    ஆனஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
தாளானைத், தன்னொப்பார் இல்லாதானைச்
    சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானைத், தோளாத முத்தொப்பானைத்
    தூவெளுத்த கோவணத்தை அரையிலார்த்த
கீளானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(2)
சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
    தூங்காதார் மனத்திருளை வாங்காதானை
நற்பான்மை அறியாத நாயினேனை
    நன்னெறிக்கே செலும் வண்ணம் நல்கினானைப்
பற்பாவும் வாயாரப் பாடியாடிப்
    பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(3)
அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை
    ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள்ஆனானை
    வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை, அல்லாதார்க்கு உளையாதானை
    உலப்பிலியை, உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(4)
தாள்பாவு கமலமலர்த் தயங்குவானைத்
    தலையறுத்து மாவிரதம் தரித்தான் தன்னைக்
கோட்பாவு நாளெல்லாம் ஆனான் தன்னைக்
    கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை, வித்துருவின் கொத்தொப்பானை
    வேதியனை, வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(5)
நல்லானை, நரைவிடையொன்று ஊர்தியானை
    நால்வேதத்தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச், சுடர்மூன்றும் ஆனான் தன்னைத்
    தொண்டாகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை
வில்லானை, மெல்லியலோர் பங்கன் தன்னை
    மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(6)
சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
    தூமத்தம் வாளரவம் சூடினானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
    ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
    மெல்லியலோர் பங்கனை, முன் வேனலானை
கிழித்தானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(7)
உளரொளியை, உள்ளத்தின் உள்ளே நின்ற
    ஓங்காரத்துட்பொருள் தான் ஆயினானை
விளரொளியை, விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
    விண்ணொடுமண் ஆகாசம் ஆயினானை
வளரொளியை, மரகதத்தின் உருவினானை
    வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தியேத்தும்
கிளரொளியைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(8)
தடுத்தானைக் காலனைக் காலால் பொன்றத்
    தன்னடைந்த மாணிக்கன்றருள் செய்தானை
உடுத்தானைப் புலியதளோடு அக்கும் பாம்பும்
    உள்குவார் உள்ளத்தில் உள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
    வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(9)
மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கையானை
    மயானத்தில் கூத்தனை, வாளரவோடென்பு
பூண்டானைப், புறங்காட்டில் ஆடலானைப்
    போகாதென்னுள் புகுந்திடம் கொண்டென்னை
ஆண்டானை, அறிவரிய சிந்தையானை
    அசங்கையனை, அமரர்கள்தம் சங்கை எல்லாம்
கீண்டானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே
(10)
முறிப்பான பேசி மலைஎடுத்தான் தானும்
    முதுகிறமுன் கைந்நரம்பை எடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டினானைப்
    பாவியேன் நெஞ்சகத்தே பாதப்போது
பொறித்தானைப், புரமூன்றும் எரி செய்தானைப்
    பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடிலாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page